பினாங்கைப் புரட்டி எடுத்த கனமழையுடனான ‘பேய் காற்று’;

  தமிழ் முரசு
பினாங்கைப் புரட்டி எடுத்த கனமழையுடனான ‘பேய் காற்று’;

ஜார்ஜ்டவுன்: மலேசியாவின் பினாங்குத் தீவில் கடந்த சில நாள்களாக கனமழையுடன் பலத்த காற்று வீசியது. கனமழையின் விளைவாக பினாங்கில் 71 இடங்களில் வெள்ளம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.பலத்த காற்று காரணமாக 130க்கும் மேற்பட்ட இடங்களில் 200க்கும் அதிகமான மரங்கள் வேரோடு சாய்ந்தன.மரங்கள் விழுந்ததில் சாலைகளில் சென்றுகொண்டிருந்த பல கார்கள் நொறுங்கின.இ்தனால் வாகன ஓட்டுநர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.மரங்கள் விழுந்ததில் பல வீடுகள் சேதமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.பினாங்கின் வடக்குப் பகுதியை செப்டம்பர் 15ஆம் தேதியிலிருந்து செப்டம்பர் 17ஆம் தேதி காலை வரை கனமழையுடன் பலத்த காற்று புரட்டி எடுத்தது.இதன் காரணமாக பினாங்கின் கடற்பகுதியும் கொந்தளிப்பாக இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.படகுத்துறைகளின் மரப்பலகைகள் சேதமடைந்ததாக அதிகாரிகள் கூறினர்.1900களில் கட்டப்பட்ட அந்தப் படகுத்துறைகள் சுற்றுப்பயணிகளிடையே பிரபலமானவை என்பது குறிப்பிடத்தக்கது.பழுதுபார்ப்புப் பணிகள் நிறைவடையும் வரை பாதிக்கப்பட்ட படகுத்துறைகளுக்குச் செல்ல வேண்டாம் என்று பெங்காலான் கோத்தா சட்டமன்ற உறுப்பினர் வோங் யுவீ ஹார்ன் சுற்றுப்பயணிகளைக் கேட்டுக்கொண்டார்.செப்டம்பர் 15ஆம் தேதியன்று (ஞாயிற்றுக்கிழமை) கிட்டத்தட்ட 90 இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்ததை அடுத்து, மூன்று வீடுகளும் எட்டு கார்களும் சேதமடைந்தன.தொடர்ந்து விழிப்புடன் இருக்கும்படி பினாங்கு முதல்வர் சாவ் கூன் யாவ் அனைத்து வாகன ஓட்டுநர்களையும் கேட்டுக்கொண்டுள்ளார்.செப்டம்பர் 17ஆம் தேதி நண்பகல் நிலவரப்படி மேலும் 43 இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்ததாக அவர் தெரிவித்தார்.தஞ்சோங் புங்காவுக்கும் பத்து ஃபெரிங்கிக்கும் இடையில் உள்ள சாலைப் பகுதியில் செப்டம்பர் 17ஆம் தேதி காலை 13 மரங்கள் வேரோடு சாய்ந்ததாககத் தெரிவிக்கப்பட்டது.சாலைகளில் விழுந்து கிடக்கும் மரங்களை அகற்றும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக பினாங்குத் தீவு நகராட்சி மன்றம் தெரிவித்துள்ளது.

மூலக்கதை