Thiruvalluvar Birthday Controversy - Madras HC / திருவள்ளுவர் பிறந்தநாள் சர்ச்சை - சென்னை உயர்நீதிமன்றம்
தமிழ் மாதம் தை 2 ஆம் தேதி திருவள்ளுவர் தினமாக விடுமுறை நாளாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளை செல்லாது என அறிவித்து வைகாசி மாதம் அனுஷம் நட்சத்திரத்தை திருவள்ளுவர் பிறந்தநாளான அறிவிக்க வேண்டும் என்று திருவள்ளுவர் திருநாள் கழகத்தின் தலைவர் பேராசிரியர் சாமி தியாகராஜன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.இந்த வழக்கு நீதிபதி எம். தண்டபாணி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "1935 ஆம் ஆண்டு நடந்த கருத்தரங்கில் கலந்து கொண்ட மறைமலை அடிகள் போன்ற தமிழ் அறிஞர்கள், வைகாசி மாதம் அனுஷம் நட்சத்திரத்தில் திருவள்ளுவர் பிறந்ததாக குறிப்பிட்டதாகவும் 600 ஆண்டுகள் முன்பு மயிலாப்பூரில் கட்டப்பட்ட திருவள்ளுவர் கோயிலில் வைகாசி மாதம் அனுஷம் நட்சத்திரத்தில் தான் பிறந்தநாள் கொண்டாடப்படுவதாகவும் தெரிவித்தார்.பின்னர் அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், தை 2ந் தேதி திருவள்ளுவர் தினம் தானே கொண்டாடப்படுகிறதே தவிர, திருவள்ளுவர் பிறந்தநாளாக கொண்டாடவில்லை என்று விளக்கம் அளித்தார். ஆதலால் இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, திருவள்ளுவர் வைகாசி மாதம் அனுசம் நட்சத்திரத்தில் பிறந்தார் என்பதற்கு ஆதாரம் இல்லை என்று கூறி இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.மேலும், மனுதாரர் தரப்பு, வைகாசி, அனுச நட்சத்திர நாளில் திருவள்ளுவர் பிறந்தநாள் கொண்டாட எவ்வித தடையில்லை என்று நீதிபதி தெளிவுபடுத்தி இருக்கிறார்.