அனைத்து கோரிக்கைகளும் நிறைவேறும் வரை போராட்டம்: பயிற்சி மருத்துவர்கள்

  தமிழ் முரசு
அனைத்து கோரிக்கைகளும் நிறைவேறும் வரை போராட்டம்: பயிற்சி மருத்துவர்கள்

கோல்கத்தா: உயர் காவல் ஆணையர் மாற்றப்பட்டு, அதிகாரிகள் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையிலும், கோல்கத்தா பயிற்சி மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தை தொடர்கின்றனர். தங்களது அனைத்து கோரிக்கைகளும் நிறைவேறும்வரை இந்தப் போராட்டம் நீடிக்கும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.கோல்கத்தாவில் ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 31 வயது மருத்துவப் பெண் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பயிற்சி மருத்துவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் அரசு தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை தங்களது பணி நிறுத்தப் போராட்டம் தொடரும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். இன்னும் நிறைவேற்றப்படாத கோரிக்கைகள் குறித்து மாநில அரசிடம் கூடுதல் பேச்சுவார்த்தைகள் நடத்தப்படும் என்றும் கூறியுள்ளனர். மேற்கு வங்கத்தில் பயிற்சி மருத்துவர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையின்படி, காவல்துறை, சுகாதாரத் துறைகளில் பல்வேறு மாற்றங்களை ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் அரசு செய்துள்ளது. அதன்படி, கோல்கத்தா காவல் ஆணையர் பதவியில் இருந்து வினீத் கோயல் நீக்கப்பட்டு புதிய காவல் ஆணையராக மூத்த ஐ.பி.எஸ். அதிகாரி மனோஜ் குமார் வர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.“எங்கள் போராட்டத்தின் அழுத்தம் காரணமாக காவல்துறை ஆணையர், வடக்குத் துணை ஆணையர், சுகாதாரப் பணிகள் இயக்குநர், மருத்துவக் கல்வி இயக்குநர் ஆகியோரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டிய நிலைக்கு மாநில அரசு தள்ளப்பட்டது. இது எங்களது போராட்டத்துக்கு கிடைத்த ஒரு பகுதி வெற்றி,” என்று பயிற்சி மருத்துவர்கள் கூறியுள்ளனர். திங்களன்று முதல்வர் பானர்ஜியை சந்தித்தபோது, முதன்மைச் செயலரை (சுகாதாரம்) நீக்க வேண்டும் என்ற எங்களது கோரிக்கையை முன்வைத்தோம். ஆனால், இதுகுறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று தெரிவித்தனர். “முதலமைச்சர் எங்களுக்கு வாய்மொழியாக உறுதியளித்தார், ஆனால், இதுவரை அதற்கான நடவடிக்கைகள் எடுத்ததாக தெரியவில்லை,” என்று பயிற்சி மருத்துவர்கள் கூறினர். சுகாதாரச் சேவைகள் மேம்படும் வரை மருத்துவமனைகளில் பாதுகாப்பை பலப்படுத்துவது மட்டும் மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யாது என்று மருத்துவர்கள் அமைப்பு கூறியுள்ளது. “மருத்துவமனை படுக்கைகள் ஒதுக்கீட்டில் ஊழல், உயிர் காக்கும் மருந்துகள் தட்டுப்பாடு போன்றவற்றால் சாதாரண மக்கள் பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். இந்த அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு காணவேண்டும். அரசு பேச்சுவார்த்தை நடத்தி தங்களது கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்ற வேண்டும்,” என மருத்துவர்கள் மன்றம் கூறியுள்ளது.

மூலக்கதை