35 லட்சம் திருமணங்கள், ரூ.4.25 லட்சம் கோடி செலவு: ஆய்வறிக்கை
மும்பை: இவ்வாண்டு நவம்பர், டிசம்பர் மாதங்களில் இந்தியாவில் ஏறத்தாழ 3.5 மில்லியன் திருமணங்கள் இடம்பெறலாம் என்றும் அவற்றுக்காக மொத்தம் ரூ.4.25 லட்சம் கோடி (S$65.7 பில்லியன்) செலவிடப்படலாம் என்றும் ஓர் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.“வரும் நவம்பர் - டிசம்பர் நடுப்பகுதி வரையிலான காலகட்டத்தில் இந்தியாவில் 35 லட்சம் திருமணங்கள் நடைபெறலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. சென்ற ஆண்டின் இதே காலகட்டத்தில் 32 லட்சம் திருமணங்கள் நடைபெற்றன,” என்று பிஎல் கேப்பிட்டல் - பிரபுதாஸ் லீலாதர் ஆய்வறிக்கை குறிப்பிட்டுள்ளது. தங்கத்திற்கான இறக்குமதி வரி குறைக்கப்பட்டுள்ளதால் அடுத்து வரும் பண்டிகை, திருமணக் காலத்தில் அதிகம் செலவிடப்படலாம் என்று ‘பேண்ட் பாஜா பாராத் அண்ட் மார்க்கெட்ச்’ என்ற அந்த ஆய்வறிக்கை கூறுகிறது. இவ்வாண்டு ஜனவரி 15 முதல் ஜூலை 15 வரை இந்தியாவில் 42 லட்சத்திற்கும் அதிகமான திருமணங்கள் இடம்பெற்றன என்றும் அதற்காக ரூ.5.5 லட்சம் கோடி செலவிடப்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது என்றும் அனைத்திந்திய வணிகர் சங்கக் கூட்டமைப்பு நடத்திய கருத்தாய்வுமூலம் தெரியவந்துள்ளது. பண்டிகை, திருமணக் காலங்களில் பயனீட்டாளர்கள் அதிகம் செலவிடுவது பங்குச்சந்தைக்கும் உந்துதல் அளிப்பதாகச் சொல்லப்படுகிறது.அக்காலகட்டத்தில் அதிகத் தேவை காரணமாக சில்லறை விற்பனை, விருந்தோம்பல், நகை, வாகனங்கள் ஆகிய துறைகள் அதிகப் பயனடைவதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே, வெளிநாட்டினரும் இந்தியாவில் வந்து திருமணம் செய்ய ஏதுவானதொரு சூழலை ஏற்படுத்தி, அதன்மூலம் அந்நியச் செலாவணியைப் பெருக்க அந்நாடு முயன்று வருகிறது. அதற்கேற்ற 25 முக்கிய இடங்களை அடையாளம் காண இந்திய அரசு திட்டமிட்டுள்ளது என்றும் அந்த ஆய்வறிக்கை கூறுகிறது.