"ஒரே நாடு ஒரே தேர்தல்" இந்திய ஜனநாயகத்தை அழித்துவிடும் - பினராயி விஜயன்

  தினத்தந்தி
ஒரே நாடு ஒரே தேர்தல் இந்திய ஜனநாயகத்தை அழித்துவிடும்  பினராயி விஜயன்

திருவனந்தபுரம்,'ஒரே நாடு, ஒரே தேர்தல்' என்ற இந்த திட்டத்தை அமல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி ஆய்வு செய்வதற்காக முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் ஒரு உயர்மட்டக்குழுவை மத்திய அரசு அமைத்திருந்தது. இந்நிலையில் ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற உயர்மட்டக் குழுவின் பரிந்துரைகளை அமைச்சரவை ஏற்றுக்கொண்டதாக மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். இதன்மூலம், மக்களவை, மாநில சட்டசபை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்படும். இதில் மக்களவை - சட்டசபைக்கு முதல் கட்டமாகவும், அடுத்த 100 நாட்களுக்குள் உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தேர்தல் நடத்த ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு பரிந்துரை செய்துள்ளது.இந்நிலையில், இந்திய நாடாளுமன்ற ஜனநாயகத்தை ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் சீர்குலைக்கும் என்று கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மேலும் பேசிய அவர், "ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மக்களவைத் தேர்தலில் பாஜக பாடம் கற்றுக்கொள்ளவில்லை என்பதையே காட்டுகிறது. ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டமானது இந்த ஆட்சிக்காலம் முடிவதற்குள் அமல்படுத்தப்படும் என அமித் ஷா கூறிய அடுத்த தினமே இத்திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.இந்திய நாடாளுமன்ற ஜனநாயகத்தை ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் சீர்குலைக்கிறது. இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் தனித்துவமான சுற்றுச்சூழலையும் பின்புலத்தையும் கொண்டது.இந்தியாவின் தேர்தல் அரசியலை ஜனாதிபதி முறையை நோக்கி நகர்த்துவதற்கு சங்பரிவார் ஒரு ரகசிய முயற்சியை மேற்கொள்கிறது. ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை அனைத்து மாநிலங்களிலும் அமல்படுத்தினால் அது கட்டாயமான முறையில் மத்திய ஆட்சியை ஏற்படுத்தும் அல்லது மக்களின் ஆணையை குறைமதிப்பிற்கு உட்படுத்தும். இறுதியில் ஜனநாயகத்தை அழித்துவிடும்" என்று அவர் கூறினார்.

மூலக்கதை