பினாங்கில் பலத்த காற்றால் சாய்ந்த மரங்கள்; தந்தை, மகள் மரணம்

  தமிழ் முரசு
பினாங்கில் பலத்த காற்றால் சாய்ந்த மரங்கள்; தந்தை, மகள் மரணம்

பினாங்கு: பினாங்கில் செப்டம்பர் 18ஆம் தேதியன்று பலத்த காற்று வீசியது. இதில் லெபு கெரேஜாவில் உள்ள பினாங்கு பரனாக்கான் மாளிகையின் வளாகத்தில் சுவருடன் அத்திமரங்களும் மூங்கில் மரங்களும் சாய்ந்தன.சுவரும் மரங்களும் விழுந்ததில் ஆடவர் ஒருவரும் அவரது மகளும் உடல் நசுங்கி மாண்டனர்.அவர்கள் இருவரும் சீனாவிலிருந்து மலேசியாவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த சுற்றுப்பயணிகள் என்று மலேசிய அதிகாரிகள் தெரிவித்தனர்.சுவரும் மரங்களின் அடர்த்தியான வேர்களும் அவர்கள் இருந்த கார் மீது விழுந்ததாகக் கூறப்படுகிறது.சம்பவம் நிகழ்ந்தபோது அந்த ஆடவர் காரின் பின் இருக்கையிலும் அவரது மகள் காரின் முன் பகுதியில் உள்ள பயணி இருக்கையிலும் அமர்ந்திருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.அந்த காரின் ஓட்டுநரான மலேசியப் பெண் ஒருவருக்கு இலேசான காயங்கள் ஏற்பட்டன.மாண்ட பெண் அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் 36 வயது லியூ சின் சின் என்று தெரியவந்துள்ளது.அவரது தந்தை குறித்து எந்த ஒரு தகவலும் வெளியிடப்படவில்லை.காருக்குள் சிக்கிய சடலங்களை மீட்க தீயணைப்பாளர்களுக்குக் கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் எடுத்தது.சுவரும் மரங்களும் விழுந்தபோது அப்பகுதியில் மேலும் இரண்டு கார்கள் சேதமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.ஆனால் அந்த கார்களுக்குள் யாரும் இல்லை.இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படுவதாக பினாங்குத் தீவின் நகராட்சி மன்ற மேயர் ஏ. ராஜேந்திரன் தெரிவித்தார்.

மூலக்கதை