லெபனானில் அலைபேசிகள் வெடித்துச் சிதறியதில் 20 பேர் உயிரிழப்பு, 450க்கும் மேற்பட்டோர் காயம்
பெய்ரூட்: லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் அலைபேசிகள் (walkie talkies) வெடித்துச் சிதறியதில் 20 பேர் மாண்டதாகவும் 450க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் லெபனானிய சுகாதார அமைச்சு செப்டம்பர் 18ஆம் தேதியன்று தெரிவித்தது.லெபனானியத் தலைநகர் பெய்ரூட்டில் ஹிஸ்புல்லா அமைப்பின் வசம் உள்ள பகுதிகளில் வெடிப்புகள் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.ஹிஸ்புல்லா போராளிகள் பயன்படுத்திய அலைபேசிகள் வெடித்துச் சிதறியதாகச் செய்திகள் வெளியாகின.மாண்ட ஹிஸ்புல்லா போராளிகளுக்கான இறுதிச் சடங்கு நடந்துகொண்டிருந்தபோது அலைபேசிகள் வெடித்ததாகவும் அதன் காரணமாக அங்கு பதற்றநிலை ஏற்பட்டதாகவும் அதிகாரிகள் கூறினர்.மக்கள் தலைதெறிக்க ஓடுவதைக் காட்டும் காணொளிகள் வெளியிடப்பட்டன.செப்டம்பர் 17ஆம் தேதியன்று, ஹிஸ்புல்லா போராளிகள் பயன்படுத்திய அகவிகள் (பேஜர்) வெடித்துச் சிதறியதில் 12 பேர் மாண்டனர். மாண்டோரில் இரண்டு சிறுவர்களும் அடங்குவர்.அகவிகள் வெடித்ததில் லெபனானெங்கும் பல பகுதிகளில் 2,800க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.இந்தத் தாக்குதல்களுக்கு இஸ்ரேல் காரணம் என்று ஹிஸ்புல்லா கூறுகிறது.செப்டம்பர் 17ஆம் தேதியன்று அகவிகள் மூலம் நடத்தப்பட்ட தாக்குதலுக்குத் தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று ஹிஸ்புல்லா அமைப்பு சூளுரைத்தது.இந்நிலையில், அடுத்த நாளே மேலும் ஒரு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.இத்தாக்குதல்கள் குறித்து இஸ்ரேல் கருத்து தெரிவிக்கவில்லை.