மூத்த அமைச்சர் லீயின் பங்களிப்பைப் பாராட்டி இந்திய சமூகத்தினர் விருந்து
இந்திய சமூகத்தினர் மூத்த அமைச்சர் லீ சியன் லூங்கின் பங்களிப்பைச் சிறப்பித்து இரவு விருந்து நிகழ்வுக்கு அக்டோபர் 10ஆம் தேதி ஏற்பாடு செய்துள்ளனர்.மரினா பே சேண்ட்ஸ் பிரதான நிகழ்வு அறையில் இரவு ஏழு மணிக்கு நடைபெறவுள்ள இந்த விருந்து நிகழ்வு, முன்னாள் பிரதமரது சாதனைகள், 50 ஆண்டுகாலமாக அவர் சிங்கப்பூருக்கு ஆற்றியுள்ள சேவை ஆகியவற்றைப் பாராட்டும் வகையில் அமைந்திடும்.குறிப்பாக, இந்திய சமூகத்தின்பால் 72 வயது திரு லீ எடுத்துக்கொண்டுள்ள அக்கறை, எண்ணற்ற இந்திய நிகழ்ச்சிகளில் அவரது பங்கேற்பு ஆகியவையும் குறிப்பிடப்படும்.“மூத்த அமைச்சர் லீ 20 ஆண்டுகளாக பிரதமராக இருந்தார். அந்த காலகட்டத்தில் அவரது நேரத்தையும் கவனத்தையும் சிங்கப்பூரின் அனைத்து இனக் குழுக்களுக்கும் அர்ப்பணித்துள்ளார்,” என்றார் ஏற்பாட்டுக் குழுத் தலைவர் திரு ஆர். ரவிந்திரன்.“இந்திய சமூகத்தின் பன்முகத்தன்மையை அவர் நன்கு புரிந்துகொண்டு பல வகைகளிலும் எங்களுக்கு ஆதரவு அளித்தார். அவரது தலைசிறந்த தலைமைத்துவத்திற்கு நன்றி கூறும் தருணம் இது,” என்றார் அவர்.விருந்து நிகழ்வில் அனைத்து இந்திய அமைப்புகளும் கலந்துகொள்ளலாம். 10 பேர் வரையில் அமரக்கூடிய மேசைக்காக முன்பதிவு செய்யலாம். ஒவ்வொரு மேசைக்குமான கட்டணம் $2,000. முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் மேசைக்கு முன்பதிவு செய்யலாம்.நிகழ்வில் பங்கேற்க விரும்பும் நபர்கள், ஓர் இந்திய அமைப்பின் வழியாகவே பதிவுசெய்ய முடியும்.மேசைக்கான முன்பதிவுக்கு, [email protected] என்ற மின்னஞ்சல்வழி அல்லது 62953258, 97913001 ஆகிய எண்கள்வழி தொடர்புகொள்ளலாம்.