தங்கம் கடத்துவோரின் புதிய உத்தி: விமான நிலையங்களுக்கு எச்சரிக்கை

  தமிழ் முரசு
தங்கம் கடத்துவோரின் புதிய உத்தி: விமான நிலையங்களுக்கு எச்சரிக்கை

சென்னை: பயணிகள் நிரம்பிய விமானத்திலிருந்து, அனைத்துலக விமான நிலையத்தில் தரையிறங்கும் ஒருவர் அல்லது இரு பயணிகளில் ஒருவருக்கு திடீரென உடல்நலம் பாதித்தால், அவர்கள் நிச்சயமாக தங்கக் கடத்தல் கும்பல் உறுப்பினர்கள்தான் என்று சென்னை அனைத்துலக விமான நிலையத்தை, சுங்கத் துறை எச்சரித்துள்ளது.அண்மையில், சுங்கத் துறை புதுடெல்லி தலைமை அலுவலகம், சென்னை, திருச்சி, கொச்சி, திருவனந்தபுரம் விமான நிலையங்களுக்கு அனுப்பியிருக்கும் அறிவுறுத்தல் கடிதத்தில், புதிய தங்கக் கடத்தல் உத்தி குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.அதாவது, குறைந்த அளவிலான தங்கத்தை அதிக பயணிகள் ஒரே விமானத்தில் கடத்தி வருகிறார்கள். இவர்கள் விமான நிலையத்தில் வந்திறங்கியதும் அதில் ஒருவர் தனக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது போலவோ, அல்லது விமான நிலைய ஊழியர்களிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபடவோ செய்கிறார். இதனால், மற்றவர்கள் எளிதாக விமான நிலையத்திலிருந்து தப்பிச் செல்ல முடிகிறது என்று அந்த அறிவுரைக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.தற்போது தங்கம் உள்ளிட்ட கடத்தலில் ஈடுபடும் குழுவினர், இதுபோன்ற உத்திகளைக் கடைப்பிடித்து, சுங்கத் துறை கெடுபிடியிலிருந்து தப்புவதாகவும் கூறப்பட்டுள்ளது. அதாவது, துபாய், அபுதாபி, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலிருந்து, பெரிய விமானங்களில் ஏராளமான பயணிகள் ஒரே நேரத்தில் தரையிறங்கும்போது, அனைவரையும் முறையாகப் பரிசோதனை நடத்தி தங்கக் கடத்தலைக் கண்டுபிடிப்பது என்பது சவாலானது.இந்த நிலையில்தான், இதுபோன்ற சம்பவங்கள், கடந்த ஓராண்டாக நடந்து வருவதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 113 பயணிகள் துபாய் விமானத்திலிருந்து வந்தனர். அவர்கள் 13 கிலோ தங்கம், 500 கைப்பேசிகள் உள்ளிட்ட பொருள்களைக் கடத்தி வந்தனர். அவை அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டன.அது மட்டுமல்லாமல், சிறிய அளவிலான பொருள்களுடன் யாரேனும் சிக்கும்போது, அவர்கள்மீது முழு கவனமும் செலுத்தப்படும் அதே நேரத்தில் பெரிய கடத்தல் பொருள்களுடன் பலரும் தப்பிக்க வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.எனவே, பயணிகளின் தரவுகளை ஆராய்ந்து, ஒவ்வொரு விமானத்திலும், அடிக்கடி பயணிக்கும் பயணிகளின் விவரங்களை எடுத்து அவர்களைத் தனியே சோதிக்க வேண்டும் என்றும், சில சாதாரண பயணிகளிடம்கூட தங்கத்தைக் கொடுத்துக் கடத்தி வந்ததும், அவர்களுக்குத் தரவுக் கட்டணம் கொடுத்துத் தங்கத்தைப் பெற்றுக்கொள்ளும் கும்பலும் செயல்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை