‘தமிழ் ஆசிரியர் பணிக்கு இந்தி, சமஸ்கிருதம் ஏன்’

  தமிழ் முரசு
‘தமிழ் ஆசிரியர் பணிக்கு இந்தி, சமஸ்கிருதம் ஏன்’

மதுரை: தமிழாசிரியர் பணிக்கு இந்தியும் சமஸ்கிருதமும் தெரிந்திருக்க வேண்டும் என்ற மத்திய வெளியுறவுத்துறை அமைச்சின் விளம்பரம் குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் எழுத்தாளருமான சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.இந்திய வெளியுறவுத் துறை அமைச்சின்கீழ் இயங்கும் பண்பாட்டு உறவுகளுக்கான இந்திய கவுன்சில் குறுகிய கால ஒப்பந்த அடிப்படையில் வெளிநாடுகளிலுள்ள தூதரகங்கள் மற்றும் பண்பாட்டு நிலையங்களில் தமிழ் மொழி ஆசிரியர்களைப் பணியமர்த்துவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்குரிய தகுதி, அனுபவம், விண்ணப்பப் படிவம், விதிமுறைகள் உள்ளிட்டவற்றை ஐசிசிஆர் அதிகாரபூர்வ இணையத்தளத்தில் வெளியிட்டுள்ளது. இதில், விரும்பத்தக்கத் தகுதி என்ற பெயரில், தமிழ் மொழி ஆசிரியர் பணிக்கு இந்தியும் சமஸ்கிருதமும் தெரிந்திருக்க வேண்டும் என்றும் அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது. இது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இதற்குப் பல்வேறு தரப்பினர் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.இதுகுறித்து நாடாளுமன்ற உறுப்பினரும் எழுத்தாளருமான சு.வெங்கடேசன் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்குக் கடிதம் எழுதியுள்ளார். இந்தப் பிரச்சினையில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தலையிட்டு, மத்திய அரசின் அந்த அறிவிப்பை மீட்டுக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் திரு சு. வெங்கடேசன் கேட்டுக் கொண்டுள்ளார்.இந்நிலையில், பாமக தலைவர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பல அரசியல் கட்சித் தலைவர்களும், பல்வேறு தமிழ் அமைப்புகளைச் சேர்ந்தோரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டும் என்பது அவசியமே; ஆனால், இந்தியும் சமஸ்கிருதமும் எதற்காகத் தெரிந்திருக்க வேண்டும்? எனச் சமூக வலைத்தளங்களில் கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன. தமிழர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள இந்த விளம்பரத்தைத் தமிழ்நாடு அரசும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும் தலையிட்டுத் திரும்பப் பெறச் செய்ய வேண்டும் எனக் கல்வியாளர்கள், தமிழ் ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

மூலக்கதை