விமானத்தில் சக பயணியால் தாக்கப்பட்ட கர்ப்பிணி

  தமிழ் முரசு
விமானத்தில் சக பயணியால் தாக்கப்பட்ட கர்ப்பிணி

விமானப் பயணத்தின்போது தமக்கு நடுக்கம் தந்த ஒரு சம்பவம் குறித்து பாருல் பட்டேல், 35, என்ற கர்ப்பிணி பகிர்ந்துகொண்டுள்ளார்.பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் சக பயணி ஒருவர் தம்மைத் தள்ளிவிட்டதுடன் தகாத சொற்களால் திட்டி, “உன் முகத்தைக் குத்தமாட்டேன் என்று மட்டும் நினைத்துவிடாதே,” என்றும் கூறினார்.சம்பவம் கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்தபோது பாருல் 11 வாரம் கருவுற்றிருந்தார். தம்முடைய துணையுடன் அவர் ஆம்ஸ்டர்டாமிலிருந்து லண்டனுக்குச் சென்றுகொண்டிருந்தார்.அப்போது விமானத்திலிருந்து பயணிகள் எல்லோரும் வெளியேறும் தருணம். தம் முன்னால் பாருல் முந்திக்கொள்ள பார்ப்பதாக எண்ணினார் அந்த ஆடவர். முந்திக்கொள்வதற்காகவே பாருல் அவரைத் தள்ளினார் எனத் தவறாக நினைத்திருக்கலாம் என்றார் பாருல்.இதையடுத்து, பாருல் விமானப் பணியாளர்களில் ஒருவரை நாடியபோது, ஆடவர் நடந்துகொண்ட விதத்திற்காக மன்னிப்பு கோரி இலவசமாக மதுப்புட்டி ஒன்றை அந்தப் பணியாளர் வழங்க முன்வந்தார்.வர்த்தகப் பகுப்பாய்வாளராகப் பணியாற்றும் பாருல், “நான்தான் தவறு செய்ததாக ஆகிவிட்டது. இப்போது யாரைப் பார்த்தாலும் பயமாக இருக்கிறது,” என்றார்.இன்பப் பயணமாக இருக்கும் என்று எதிர்பார்த்திருந்தது, நடுங்க வைத்த ஒன்றாக மாறியதாக அவர் குறிப்பிட்டார்.ஆடவர் தம்மைத் தொடர்ந்து வசைபாடியதாகவும் மிரட்டல்கள் விடுத்ததாகவும் பாருல் கூறினார்.“பாதுகாப்பு அதிகாரிகளைக் கூப்பிடுமாறு கேட்டேன். நான் அதிர்ச்சியில் இருந்தேன். என்னால் பேசவும் முடியவில்லை, அழுதுகொண்டிருந்தேன். ஆனால், எங்களுக்கு அந்த நேரத்தில் எதற்காக அந்த மதுப்புட்டியை அவர் தந்தார் என்றுதான் புரியவில்லை,” என்றார் பாருல்.வாடிக்கையாளர் சேவைத் தரம் பற்றிய புகாரன்று, இது தாக்குதல் தொடர்பானது என்றும் அவர் குறிப்பிட்டார்.இச்சம்பவம் தொடர்பில் பாருல் மீண்டும் அவ்விமான நிறுவனத்தைத் தொடர்புகொண்டபோது அவர்கள் 50 பவுண்டு மதிப்புடைய பற்றுச்சீட்டை வழங்கினர்.மீண்டும் விமான நிலையத்தின் வருகையாளர் பகுதியில் தாம் அந்த ஆடவரைச் சந்தித்ததாகவும் அவர் தம்மையும் வயிற்றில் இருந்த கருவையும் சபித்துப் பேசியதாகவும் பாருல் கூறினார்.தொடர் மிரட்டல்களும் முரட்டுத்தனமான நடத்தையும் இருந்தபோதும் காவல்துறையினரால் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை என்றார் பாருல்.காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தபோது அதற்குள் ஆடவர் அங்கிருந்து சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.

மூலக்கதை