வேலை அழுத்தத்தால் மகள் இறந்ததாகத் தாயார் குற்றச்சாட்டு; அமைச்சு விசாரணை

  தமிழ் முரசு
வேலை அழுத்தத்தால் மகள் இறந்ததாகத் தாயார் குற்றச்சாட்டு; அமைச்சு விசாரணை

நிறுவனம் ஒன்றில் சேர்ந்த நான்கே மாதங்களில் இறந்துவிட்டார், கேரளாவைச் சேர்ந்த 26 வயது அனா செபேஸ்டியன் பேராயில். இதையடுத்து, வேலை தொடர்பான அழுத்தத்தால் தம் மகள் இறந்துவிட்டார் என்று அனாவின் தாயார் குற்றஞ்சாட்டி மின்னஞ்சல் ஒன்றை மகளின் முதலாளிக்கு அனுப்பியுள்ளார்.அத்துடன் தம் மகளின் இறுதிச் சடங்குக்கு நிறுவனத்தைச் சேர்ந்த எவருமே வரவில்லை என்று அனாவின் தந்தை சிபி ஜோசஃப் தெரிவித்துள்ளார்.கணக்காளராக புனேயில் உள்ள ‘எர்ன்ஸ்ட் & யங்’ நிறுவனத்தில் சேர்ந்தார் அனா. அங்குள்ள வேலைச்சூழல் ‘பாதுகாப்பற்றது’, அநியாயமாக ஒருவரைப் பயன்படுத்துவது’ என்று கூறப்பட்டுள்ள நிலையில், நிறுவனம் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.தொழிலாளர், வேலைவாய்ப்பு அமைச்சு புகாரை அதிகாரபூர்வமாகக் கையாண்டு முழுமையான விசாரணை ஒன்றை நடத்தத் தொடங்கியுள்ளது.இது தொடர்பில் பேசிய தொழிலாளர் துறை இணை அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே, “இந்த இழப்புக்கு மிகவும் வருந்துகிறோம். நியாயம் கிடைப்பதை உறுதிசெய்யக் கடமைப்பட்டிருக்கிறோம்,” என்றார்.அளவுக்கு மீறி வேலை பார்க்கும் போக்கை நிறுவனம் ஊக்குவித்துப் பாராட்டுவதாக அனாவின் தாயார் அனிதா ஆகஸ்டின் தமது மின்னஞ்சலில் குறிப்பிட்டு நிறுவனத்தைச் சாடியிருந்தார்.இரவு முழுக்க கண்விழிப்பதும் வார இறுதிகளில் வேலை பார்ப்பதுமாகத் தம் மகள் இருந்தார் என்று அவர் சுட்டினார்.அத்துடன் நிறுவனத்தின் மனித உரிமை தொடர்பான விழுமியங்களுக்கும் தம் மகள் அனுபவித்ததற்கும் இருந்த பெரும் வேறுபாட்டையும் அவர் சுட்டிக் காட்டினார்.அதிகப்படியான வேலைப்பளு காரணத்தால் ஊழியர்கள் பலரும் நிறுவனத்தை விட்டுச் சென்றுவிட்டதைக் குறிப்பிட்ட அனாவின் புதிய முதலாளி, அவர்களது குழுவைப் பற்றி அனைவரும் கொண்டுள்ள எண்ணத்தை அனாதான் மாற்ற வேண்டும் என்று கூறியுள்ளார். அதனால் எதிர்பார்ப்புகளை நிறைவுசெய்வதற்காக அனா அயராது உழைத்திருக்கிறார் என்றார் அந்தத் தாயார்.ஒருமுறை, இரவுவேளை ஒரு பணியை அந்த முதலாளி தம் மகளுக்குக் கொடுத்துவிட்டு மறுநாள் காலையில் அந்தப் பணியை முடித்துத்தர வேண்டும் என்றாராம். ஓய்வெடுக்க நேரமே தராத நிலையில், இதுகுறித்து அனா அந்த முதலாளியிடம் கூறியபோது, “இரவில் வேலை பார்க்க வேண்டியதுதான். நாங்கள் எல்லோரும் அதைத்தான் செய்கிறோம்,” என்றாராம்.ஊழியர்களின் மனநலத்துக்கும் நல்வாழ்வுக்கும் முன்னுரிமை அளிக்கும் முக்கியப் படிகளை நிறுவனம் எடுக்க வேண்டும் என்றும் தம் மகளின் இறப்பு நிறுவனத்துக்கு ஓர் அறைகூவலாக இருக்க வேண்டும் என்றும் மகளை இழந்த அந்தத் தாயார் கூறியுள்ளார்.அனாவின் இறப்புக்குக் காரணம் தெளிவாகத் தெரியவில்லை என்றாலும் அவர் நெஞ்சுப் பகுதியில் ஒருவித இறுக்கத்தை உணர்வதாக அடிக்கடி கூறியதாக அறியப்படுகிறது.புனேயில் உள்ள மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்றபோது, போதுமான உறக்கம் பெறாததும் குறித்த நேரத்தில் உணவு உண்ணாததும் காரணங்களாக இருக்கலாம் என்று அங்கிருந்த இதயநோய் நிபுணர் கூறியதாகத் தெரிவிக்கப்பட்டது.நிறுவனத்தில் 2024ஆம் ஆண்டு மார்ச் 18ஆம் தேதி சேர்ந்த அனா, ஜூலை 20ஆம் தேதி உயிரிழந்தார்.அனாவின் இறப்பு தங்களுக்குப் பெரும் வேதனையை அளித்துள்ளதாக அறிக்கை வெளியிட்ட நிறுவனம், இந்தியா முழுவதும் உள்ள அனைத்து இடங்களிலும் வேலை பார்க்கும் அதன் 100,000 ஊழியர்களுக்கு மேம்பட்ட, ஆரோக்கியமான ஓர் வேலைச்சூழலை உருவாக்கித் தர முயலும் என்று கூறியுள்ளது.

மூலக்கதை