மருத்துவ விடுப்போ ஓய்வு நாளோ இல்லை: 31 ஆண்டுகளுக்குப் பிறகு தாயகம் திரும்பும் பங்ளாதேஷ் ஊழியர்

  தமிழ் முரசு
மருத்துவ விடுப்போ ஓய்வு நாளோ இல்லை: 31 ஆண்டுகளுக்குப் பிறகு தாயகம் திரும்பும் பங்ளாதேஷ் ஊழியர்

பெட்டாலிங் ஜெயா: மலேசியாவின் கிள்ளானில் உள்ள கடைத்தொகுதியில் துப்புரவாளராகப் பணிபுரிந்து வந்த 70 வயது பங்ளாதேஷிய ஆடவர் ஒருவர், மலேசியாவில் 31 ஆண்டுகள் வேலை செய்துவிட்டு ஒருவழியாக நாடு திரும்புகிறார்.Humans of Kuala Lumpur எனும் இன்ஸ்டகிராம் தளத்திற்குப் பேட்டியளித்த அபுபக்கர், தம் ஐந்தாவது பிள்ளையின் வயது ஆறு மாதங்களாக மட்டுமே இருந்த நிலையில், 31 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்வாதாரத்தைத் தேடி பங்ளாதேஷிலிருந்து புறப்பட்டதாகச் சொன்னார். “அதற்குப் பிறகு நான் தாயகம் திரும்பவே இல்லை. என் குடும்பத்தைக் காண நான் ஏங்குகிறேன். என்னைப் பார்க்க என் குடும்பமும் ஏங்குகிறது. ஆனால், நான் செய்துள்ள அனைத்தும் என் குடும்பத்துக்காகவே. அவர்களின் எதிர்காலத்துக்காகவே நான் இதைச் செய்துள்ளேன்,” என்றார் அபுபக்கர். இவரின் மகள் நீதிபதியாகவும் இரு மகன்கள் மருத்துவராகவும் பொறியாளராகவும் உள்ளனர். மலேசியாவில் பல வேலை வாய்ப்புகள் இருப்பதாக தாம் கேள்விப்பட்டதால், தாம் அங்கு சென்றதாக அவர் பகிர்ந்தார். “மற்றவர்கள் செய்ய விரும்பாத வேலையைச் செய்ய வேண்டியிருந்தாலும், நான் அதைச் செய்வேன். வாரத்தில் ஏழு நாள்கள், ஆண்டில் 365 நாள்கள் எனக் கடந்த 27 ஆண்டுகளாக இவ்வாறு செய்து வந்துள்ளேன்,” என்றார் அபுபக்கர். “மருத்துவ விடுப்போ ஓய்வு நாளோ நான் எடுத்துக்கொண்டதே இல்லை. இறைவனின் அருளால், நான் இன்னும் வலுவாகத்தான் உள்ளேன்,” என்று சொன்ன இவர், சகாக்கள் மத்தியில் ஆக மூத்தவராவார். கிள்ளான் அரச நகர மன்றத்தால் வழங்கப்படும் ‘ஆகத் தூய்மையான பொதுக் கழிப்பறை’க்கான (கடைத்தொகுதிகள்) விருது ஒன்றை தமது குழு வென்றதைத் தொடர்ந்து, அபுபக்கர் அளித்த பேட்டியில் இதனைப் பகிர்ந்தார். தம்மை எளிய தேவைகளுடைய மனிதராக வர்ணித்துக்கொள்ளும் இவர், தம் சம்பளத்தில் பெரும்பகுதியை பங்ளாதேஷில் உள்ள தம் குடும்பத்துக்கு அனுப்பிவிடுவார்.“காலையில் கண்விழித்து, குளித்துவிட்டு, காலை உணவு சாப்பிட்டுவிட்டு வேலைக்குச் சென்றுவிடுவேன். வேலை முடிந்து வீடு திரும்பியவுடன், தாயகத்தில் என் குடும்பத்தாருடன் கைப்பேசியில் பேசிவிட்டு நான் ஓய்வெடுப்பேன். அடுத்தடுத்த நாள் இதே முறை தொடரும்,” என்றார் அபுபக்கர். “என் மகள்களில் ஒருவர் இப்போது நீதிபதியாகவும் மகன்கள் மருத்துவராகவும் பொறியாளராகவும் உள்ளனர். அவர்கள் அடைந்துள்ள முன்னேற்றத்துக்காக நான் பெருமிதம் கொள்கிறேன்,” என்று கூறிய அபுபக்கர், மலேசியாவில் தாம் பணிபுரிந்து வந்துள்ள இத்தனை காலம் தமக்கு சில நண்பர்கள் கிடைத்துள்ளதாகச் சொன்னார். “வரும் டிசம்பரில் நான் தாயகம் திரும்புகிறேன். என் குடும்பத்தாருடன் நான் இணையப் போகிறேன். என் இரு பேரப்பிள்ளைகளைச் சந்திக்கப் போவது இதுவே முதன்முறை,” எனக் குறிப்பிட்ட இவர், அந்த நாளுக்காக தம்மால் காத்திருக்க முடியவில்லை என்றார். அபுபக்கரின் நீண்ட பயணம் குறித்த அந்த இன்ஸ்டகிராம் பதிவுக்கு இணையவாசிகள் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டுள்ளனர். “பாதுகாப்பாக சென்று வாருங்கள், அங்கிள். உங்களுக்கு எப்போதும் மகிழ்ச்சி நிலைத்திருக்கட்டும். எங்கள் நாட்டில் வேலை செய்ததற்கு நன்றி. நாங்கள் அதற்கு நன்றிக்கடன் பட்டுள்ளோம்,” என்றார் isme_medina எனும் பயனர்.“ஒரு தந்தையின் தியாகம் அளப்பரியது. தாயகத்தில் இருக்கும் குடும்பத்துக்காக வேறொரு நாட்டிற்குச் சென்று இவ்வளவு காலம் வேலை செய்தது சாதாரண காரியமன்று. தம் குடும்பத்துக்காக இவ்வளவு காலம் அவர் செய்த தியாகத்துக்காக, அவரின் பிள்ளைகள் அவரை நன்கு கவனித்துக்கொள்ளட்டும்,” என்றார் azraiyusni எனும் பயனர். அந்த இஸ்டகிராம் பதிவைப் படித்துக்கொண்டிருந்தபோது தாம் அழுததை உணரவில்லை என rohana_azhari என்பவர் பதிவிட்டார்.

மூலக்கதை