சிவப்பு அட்டையால் சறுக்கிய பார்சிலோனா

  தமிழ் முரசு
சிவப்பு அட்டையால் சறுக்கிய பார்சிலோனா

மொனாக்கோ: முன்னணி ஸ்பானியக் காற்பந்துக் குழுவும் ஐந்துமுறை வெற்றியாளருமான பார்சிலோனா இப்பருவத்தின் சாம்பியன்ஸ் லீக்கைத் தோல்வியுடன் தொடங்கியுள்ளது.பிரான்சின் மொனாக்கோ குழுவிற்கெதிராக வியாழக்கிழமை (செப்டம்பர் 19) இரவு நடந்த ஆட்டத்தில் 2-1 என்ற கோல் கணக்கில் அக்குழு தோற்றுப்போனது. ஆட்டத்தின் பத்தாவது நிமிடத்திலேயே எரிக் கார்சியா சிவப்பு அட்டை பெற்று வெளியேறியது பார்சிலோனாவிற்குப் பின்னடைவை ஏற்படுத்தியது. முற்பாதியில் இரு குழுக்களும் தலா ஒரு கோலைப் போட்டு, சமநிலையுடன் இடைவேளைக்குச் சென்றன. ஆயினும், நைஜீரிய ஆட்டக்காரர் ஜார்ஜ் இலினிகெனா 71ஆம் நிமிடத்தில் அடித்த கோல் மொனாக்கோ குழுவிற்கு வெற்றி தேடித் தந்தது. இந்த ஆட்டத்தில் பார்சிலோனாவிற்காக கோலடித்த இளம் ஸ்பானிய ஆட்டக்காரர் லாமின் யமால், சாம்பியன்ஸ் லீக்கில் கோலடித்த இரண்டாவது ஆக இளைய ஆட்டக்காரர் என்ற சாதனையைப் படைத்தார். அவரது வயது 17 ஆண்டுகள் 68 நாள்கள்.இத்தாலியின் அடலான்டா குழுவிற்கெதிரான சாம்பியன்ஸ் லீக் ஆட்டத்தில் இங்கிலாந்தின் ஆர்சனல் குழு ஒரு புள்ளியைப் பெற முக்கியக் காரணமாகத் திகழ்ந்தார் அதன் கோல்காப்பாளரான டேவிட் ராயா. இவ்விரு குழுக்களுக்கு இடையிலான ஆட்டம் 0-0 என கோலேதுமின்றி சமனில் முடிந்தது. ஆட்டத்தின் 51ஆவது நிமிடத்தில் பெனால்டி கிக் வாய்ப்பு கிடைத்தும் ராயா அருமையாகச் செயல்பட்டுப் பந்தைத் தடுத்ததால் அடலாண்டாவின் கோல் முயற்சி தவிடுபொடியானது. முதல் 20 நிமிடங்களுக்குப் பிறகு ஆட்டத்தில் தாங்கள் கட்டுப்பாட்டை இழந்துவிட்டதாகக் கூறிய ஆர்சனல் நிர்வாகி மிக்கெல் அர்டேட்டா, தம் வாழ்நாளில் கண்ட ஆகச் சிறந்த கோல் முறியடிப்பு ராயாவினுடையதுதான் என்று மெச்சினார்.

மூலக்கதை