பிறந்தநாள் கொண்டாட்டம் முடிந்து வீடு திரும்பிய மாணவர் விபத்தில் சிக்கி உயிரிழப்பு

  தமிழ் முரசு
பிறந்தநாள் கொண்டாட்டம் முடிந்து வீடு திரும்பிய மாணவர் விபத்தில் சிக்கி உயிரிழப்பு

புதுடெல்லி: இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் ராஜ்காட் அருகே உள்ள சாலைத் தடுப்பின் மீது கார் மோதிய விபத்தில் அதிலிருந்த டெல்லி பல்கலைக்கழக மாணவர் ஒருவர் வியாழக்கிழமை (செப்டம்பர் 19) உயிரிழந்தார்.நண்பர்கள் நால்வருடன் சேர்ந்து பிறந்தநாளைக் கொண்டாடிவிட்டு குருகிராமிலிருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்தார் ஐஸ்வர்யா பாண்டே, 19. அவரும் அவருடைய நண்பர்களும் இருந்த Hyundai Venue காரின் முன்கண்ணாடியினுள் சாலைத் தடுப்பு சொருகியது. இதில் பாண்டேவின் நண்பர்கள் காயமடைந்தனர். Deshbandhu கல்லூரி முதலாமாண்டு ‘பிஏ’ மாணவரான பாண்டே, எல்என்ஜேபி மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டு அங்கு அவருக்கு செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டது. சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை இரவு அவர் உயிரிழந்தார். “புதன்கிழமை பாண்டேவின் பிறந்தநாள். நண்பர்களுடன் சேர்ந்து பிறந்தநாளை கொண்டாடிய அவர், வாடகைக்கு கார் ஒன்றை எடுத்தார். டெல்லி திரும்பியபோது, தம் நண்பர் ஐஸ்வர்யா மிஸ்ராவிடம் கார் சாவியை அவர் வழங்கினார்,” என்று மூத்த காவல்துறை அதிகாரி கூறியதை பிடிஐ செய்தி நிறுவனம் மேற்கோள் காட்டியது. ஓட்டுநருக்குப் பின்னால் அமர்ந்திருந்த பாண்டேவுக்கு கடுமையான காயங்கள் ஏற்பட்டன. உத்தரப் பிரதேசம், இட்டாவா மாவாட்டத்தைச் சேர்ந்த பாண்டே, கிழக்கு டெல்லியின் லெட்சுமி நகரில் உள்ள மாணவர் விடுதியில் வசித்து வந்தார். அவருடைய பெற்றோர் இருவரும் ஏற்கெனவே இறந்துவிட்டனர். “தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றிய அவரின் தந்தை, உடல்நலக்குறைவு காரணமாக இறந்துவிட்டார். ஆசிரியரான அவரின் தாயார், சாலை விபத்தில் இறந்துவிட்டார்,” என்று பாண்டேவின் உறவினர் ஒருவர் கூறினார். இந்நிலையில், பாண்டேவை போல இட்டாவா மாவட்டத்தைச் சேர்ந்த மிஸ்ராவுக்கும் கடுமையான காயங்கள் ஏற்பட்டன. டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அவர் சேர்க்கப்பட்டுள்ளார்.

மூலக்கதை