அதிபர் தேர்தலால் வாழ்வு சிறக்கும் என்ற நம்பிக்கையில்லை: இலங்கைத் தமிழர்கள்

  தமிழ் முரசு
அதிபர் தேர்தலால் வாழ்வு சிறக்கும் என்ற நம்பிக்கையில்லை: இலங்கைத் தமிழர்கள்

யாழ்ப்பாணம்: இலங்கையில் நாளை நடைபெற இருக்கும் அதிபர் தேர்தலால் தங்களது வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும் என்ற நம்பிக்கையில்லை என்று சிறுபான்மைத் தமிழ் மக்கள் தெரிவித்து உள்ளனர்.நீண்டகால உள்நாட்டுப் போராலும் பாதாளத்திற்குச் சரிந்த பொருளியலாலும் பாதிக்கப்பட்ட இலங்கை மக்கள் தங்களது அன்றாட வாழ்க்கைக்கு சிரமப்படும் நிலை ஏற்பட்டு உள்ளது.ஏறத்தாழ 22 மில்லியன் மக்கள்தொகையைக் கொண்ட இலங்கையில் 12 விழுக்காட்டினர் தமிழர்கள். இருப்பினும், ஆட்சி அதிகாரத்தில் தமிழர்கள் தொடர்ந்து ஓரங்கட்டப்பட்டு வருகின்றனர்.நாளைய அதிபர் தேர்தல் களத்தில் பெரும்பான்மை சிங்கள இனத்தவரே வேட்பாளர்களாக உள்ளனர். அவர்களால் தங்களது வருங்காலம் செழிக்கும் என்ற நம்பிக்கை இல்லை என்கிறார்கள் இலங்கைத் தமிழர்கள்.தமிழீழ நாட்டை உருவாக்க தமிழ்ப் போராளிகளுக்கும் அரசாங்கப் படையினருக்கும் இடையே 26 ஆண்டுகாலமாக நடைபெற்று வந்த உள்நாட்டுப் போர் 2009ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது.அந்தப் போரில் 40,000 மக்கள் உயிரிழந்ததாக ஐக்கிய நாடுகள் மன்றம் மதிப்பிட்டு உள்ளது. இந்நிலையில், அதிபர் தேர்தலையொட்டி ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் சிறுபான்மைத் தமிழ் மக்களைச் சந்தித்து கருத்து திரட்டியது. பரமசாமி தனபாலசிங்கம், 62, என்பவர் கூறுகையில், “உள்நாட்டுப் போரால் ஏற்பட்ட சீரழிவில் இருந்து மீண்ட பின்னர் கொரோனா நோய்த் தொற்று பரவியது. அதனைத் தொடர்ந்து பொருளியல் படுபாதாளத்துக்குச் சென்றது. இவ்வளவு போராட்டத்திற்குப் பின்னர் இனியும் எங்களது வாழ்க்கைச் செழிக்கும் என்ற நம்பிக்கை இல்லை,” என்றார்.வடக்கு மாகாணத் தலைநகரான யாழ்ப்பாணைத்தைச் சேர்ந்த அவர், மீனவராக உள்ளார். சனிக்கிழமை (செப்டம்பர் 21) நடைபெற இருக்கும் அதிபர் தேர்தல், வரலாறு காணாத பொருளியல் சரிவு ஏற்பட்டு கடனில் இலங்கை மூழ்கிய பின்னர் நடைபெற இருக்கும் முதல் தேர்தல் ஆகும்.தேர்தலில் இலங்கையின் வடமாகாணத்தில் செயல்படும் தமிழ் கட்சிகளுக்கே இலங்கைத் தமிழர்கள் வாக்களிப்பது வழக்கம். ஆனால், இம்முறை தமிழ் கட்சிகளிடையே பிளவு ஏற்பட்டு இருப்பதால் தமிழர்களின் வாக்குகள் சிதறும் நிலை உள்ளதாக திரு தனபாலசிங்கம் கூறினார்.

மூலக்கதை