வலுவான முன்னிலையுடன் இந்தியா

  தமிழ் முரசு
வலுவான முன்னிலையுடன் இந்தியா

சென்னை: இந்திய கிரிக்கெட் அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியின் பங்ளாதேஷ் அணி, இந்திய வீரர்களின் பந்துவீச்சைச் சமாளிக்க இயலாமல் 149 ஓட்டங்களுக்குச் சுருண்டது.இரண்டு டெஸ்ட், மூன்று டி20 போட்டிகளில் விளையாடுவதற்காக பங்ளாதேஷ் அணி இந்தியா சென்றுள்ளது. சென்னையில் வியாழக்கிழமை (செப்டம்பர் 19) முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதலில் பந்தடித்தது. உள்ளூர் வீரர் அஸ்வினும் (113 ஓட்டங்கள்) ரவீந்திர ஜடேஜாவும் (86 ஓட்டங்கள்) கைகொடுக்க, முதல் நாளில் இந்திய அணி ஆறு விக்கெட் இழப்பிற்கு 339 ஓட்டங்களைக் குவித்தது. இரண்டாம் நாளான வெள்ளிக்கிழமை எஞ்சிய நான்கு விக்கெட்டுகளையும் விரைவில் பறிகொடுத்தது இந்தியா. இறுதியில், அந்த அணி தனது முதல் இன்னிங்சில் 376 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. அடுத்து பந்தடித்த பங்ளாதேஷ் அணியினருக்கு இந்தியப் பந்துவீச்சாளர்கள் பெருஞ்சவாலாகத் திகழ்ந்தனர். முதல் ஓவரிலேயே தொடக்க ஆட்டக்காரர் ஷத்மான் இஸ்லாமை வெளியேற்றினார் ஜஸ்பிரீத் பும்ரா. அடுத்து வந்தவர்களாலும் இந்தியப் பந்துவீச்சைத் தாக்குப்பிடிக்க முடியவில்லை. இதனால், அவ்வணி 149 ஓட்டங்களுக்கே ஆட்டமிழந்தது. பும்ரா நான்கு விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.பின்னர் இரண்டாம் இன்னிங்சைத் தொடங்கிய இந்திய அணி இரண்டாம் நாள் முடிவில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 81 ஓட்டங்களை எடுத்திருந்தது. இப்போதே 300 ஓட்டங்களுக்குமேல் முன்னிலை பெற்றுள்ளதால் இந்திய அணி போட்டியை எளிதாக வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மூலக்கதை