பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து இந்திய ராணுவ வீரர்கள் நால்வர் உயிரிழப்பு (காணொளி)

  தமிழ் முரசு
பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து இந்திய ராணுவ வீரர்கள் நால்வர் உயிரிழப்பு (காணொளி)

ஸ்ரீநகர்: ஆழமான பள்ளத்திற்குள் பேருந்து விழுந்ததில் அதில் பயணம் செய்த இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையினரில் நால்வர் உயிரிழந்தனர்; மேலும் 32 பேர் காயமுற்றனர்.இவ்விபத்து ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் பத்காம் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 20) நிகழ்ந்தது. ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் செப்டம்பர் 25ஆம் தேதி இரண்டாம் கட்டத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், பாதுகாப்புப் பணிகளுக்காக அவர்கள் சென்றுகொண்டிருந்தபோது இத்துயரம் நேர்ந்தது. அந்த வாடகைப் பேருந்தில் 36 ராணுவ வீரர்கள் இருந்ததாகக் கூறப்பட்டது. மலைப்பாதையில் சென்றுகொண்டிருந்தபோது அப்பேருந்து சாலையிலிருந்து வழுக்கிச் சென்று, 40 அடி ஆழப் பள்ளத்தில் விழுந்ததாகக் காவல்துறை தெரிவித்தது.உள்ளூர்வாசிகளின் துணையுடன் மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. காயமடைந்த வீரர்கள் அருகிலிருந்த மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் அறுவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. பேருந்து ஓட்டுநரும் விபத்தில் காயமடைந்தார். விபத்து குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் சிக்கிய பேருந்து முற்றிலும் உருக்குலைந்திருந்ததைப் படங்களும் காணொளிகளும் காட்டின. ஜம்மு - காஷ்மீரில் இம்மாதம் 18ஆம் தேதி முதற்கட்ட வாக்களிப்பு இடம்பெற்றது. மூன்றாம் கட்ட வாக்களிப்பு அக்டோபர் 1ஆம் தேதி நடைபெறும். வாக்குகள் அக்டோபர் 8ஆம் தேதி எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படும்.

மூலக்கதை