சிறார் துன்புறுத்தல்: குளோபல் இக்வான் வர்த்தகக்கூடங்களில் சோதனை

  தமிழ் முரசு
சிறார் துன்புறுத்தல்: குளோபல் இக்வான் வர்த்தகக்கூடங்களில் சோதனை

கொம்பாக், சிலாங்கூர்: சிறார் துன்புறுத்தல் விவகாரத்தில் சிக்கியுள்ள ‘குளோபல் இக்வான் சர்விசஸ் அண்ட் பிஸ்னஸ் ஹோல்டிங்ஸ்’ (ஜிஐஎஸ்பி) சிலாங்கூரில் நடத்தும் வர்த்தகக் கட்டடங்களில் மலேசியக் காவல்துறை சனிக்கிழமை (செப்டம்பர் 21) சோதனை நடத்தியது.சிலாங்கூர் காவல்துறைப் பிரிவைச் சேர்ந்த 50 அதிகாரிகள் 200 பணியாளர்களுடன் மத்திய ஆயுதப் படை மற்றும் இதர அமைப்புகளின் அதிகாரிகளும் அந்தச் சோதனையில் ஈடுபட்டனர். ரிவாங்கின் பண்டார் கண்ட்ரி ஹோம்ஸில் உள்ள வர்த்தக மையத்தில் காலை 6.30 மணிக்கு அதிகாரிகள் சோதனையைத் தொடங்கியதாக தகவல்கள் வெளியாயின. குளோல் இக்வான் குழுமத்துக்குச் சொந்தமானவையாக நம்பப்டும் வாகனப் பட்டறை, பழைய துணிக் கடை, உணவகம், அச்சகம், ஊடக நிர்வாக நிறுவனம் மற்றும் ஒரு ஹோட்டலில் சோதனை நடத்தப்பட்டது. அந்த வட்டாரத்தில் உள்ள பல்வேறு கடைகளுக்கு சிலாயாங் நகர மன்ற அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர். கடந்த வியாழக்கிழமை குளோபல் இக்வான் தலைமை நிர்வாக அதிகாரி, அவரது மனைவி மற்றும் சில குடும்ப உறுப்பினர்களை காவல்துறையினர் தடுத்து வைத்தனர். கோலாலம்பூரில் நான்கு வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையைத் தொடர்ந்து அவர்களை கால்துறை அழைத்துச் சென்றது.தலைமை நிர்வாக அதிகாரியின் இரண்டாவது மனைவி சனிக்கிழமை கைது செய்யப்பட்டார். கம்போங் பாஞ்சியில் உள்ள மூன்று வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில் அவர் பிடிபட்டார்.அவர் தவிர ஆறு மாதக் குழந்தை முதல் 70 வயது முதியோர் வரை பத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு சமூகநலத் துறை வேனில் அழைத்துச் செல்லப்பட்டதாக ‘சினார் ஹரியான்’ செய்தித்தளம் கூறியது.துன்புறுத்தல், ஓரினப் புணர்ச்சி, முறை தவறிய சமய போதனை உள்ளிட்ட புகார்களில் குளோபல் இக்வான் நடத்தும் சிறார் இல்லங்கள் சிக்கியுள்ள நிலையில் காவல்துறையின் நடவடிக்கைகள் நீடித்து வருகின்றன.சிலாங்கூர் மற்றும் நெகிரி செம்பிலானில் குளோபல் இக்வான் நடத்தி வரும் 20 சிறார் இல்லங்களிலிருந்து 402 சிறார்களும் பதின்ம வயதினரும் ஏற்கெனவே மீட்கப்பட்டுவிட்டனர்.அவர்களில் சிலர் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்டுள்ளதாக வெளியான தகவலைத் தொடர்ந்து காவல்துறையினர் நடவடிக்கையில் இறங்கினர். இதுதொடர்பாக 171 பேர் கைது செய்யப்பட்டனர். சிறாருக்குப் பாலியல் துன்புறுத்தல் இழைக்கப்பட்டதாக நம்பப்படும் சமயப் பள்ளிகளை சிலாங்கூர் இஸ்லாமிய சமய மன்றம் (Mais) மூடவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.இதற்கிடையே, குளோபல் இக்வானுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்க சிலாங்கூர் சுல்தான் உத்தரவிட்டுள்ளார். அந்த நிறுவனத்திற்கு எதிராக இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதாக இல்லை என்று சனிக்கிழமை சுல்தான் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் தமது ஏமாற்றத்தை வெளிப்படுத்தி உள்ளார்.ஜோகூர் இஸ்லாமிய சமய மன்றமும் (MAINJ) காவல்துறையுடன் இணைந்து, மாநிலத்தில் குளோபல் இக்வான் நிறுவனத்தின் நடவடிக்கைகள் தொடர்பான விசாரணையில் ஈடுபட்டு இருப்பதாகத் தெரிவித்து உள்ளது. இஸ்லாமிய புனிதத்தையும் பொதுமக்களின் நலனையும் காக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக விசாரணையில் இறங்கி இருப்பதாக மன்றத்தின் சமய விவகாரக் குழுத் தலைவர் முகம்மது ஃபாரட் முகம்மது காலித் கூறினார்.

மூலக்கதை