குறைந்தது 90 பேரின் உயிரைப் பறித்த ‘ஹெலன்’ புயல்
ஃபிளாட் ராக்: ‘ஹெலன்’ புயல் காரணமாக அமெரிக்காவின் தென்கிழக்குப் பகுதிகளில் குறைந்தது 90 பேர் மாண்டுவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.கூடுதல் சடலங்கள் மீட்கப்படக்கூடும் என்றும் மாண்டோர் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்றும் அஞ்சப்படுகிறது.வடகரோலைனா, தென்கரோலைனா, ஜார்ஜியா, ஃபுளோரிடா, டெனிசி, வெர்ஜினியா ஆகிய மாநிலங்கள் பாதிப்படைந்தன.இந்நிலையில், புயல் காரணமாக வேரோடு சாய்ந்த மரங்கள், சாலைகளில் விழுந்து கிடந்த இடிபாடுகள் ஆகியவற்றை அகற்றும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.புயல் காரணமாக கைப்பேசி சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ள நிலையில், தங்கள் அன்புக்குரியவர்களுடன் தொடர்புகொள்ள முடியாமல் நூற்றுக்கணக்கானோர் தவிப்பதாக அதிகாரிகள் கூறினர்.புயல் காரணமாக 15 பில்லியன் அமெரிக்க டாலரிலிருந்து 100 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமான தொகை வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.குடிநீர் விநியோகம், தொடர்பு சேவைகள், முக்கிய போக்குவரத்துப் பாதைகள் ஆகியவை வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளன.சொத்துகளுக்கு ஏற்பட்டுள்ள சேதங்கள், பொருளியல் ரீதியிலான இழப்பு குறித்து தெரிந்துகொள்ள அதிகாரிகள் ஆய்வு நடத்தி மதிப்பீடு செய்வர் என்று தெரிவிக்கப்பட்டது.வடகெரோலைனா மாநிலத்தில் மாண்டோர் அனைவரும் பன்கோம் கவுன்டியைச் சேர்ந்தவர்கள்.அங்கு 30 பேர் மாண்டதாக அவ்விடத்தின் ஷெரிஃப் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.அங்குள்ள மக்களுக்கு உணவும் குடிநீரும் உடனடியாகத் தேவைப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கியிருப்பதாக அதிகாரிகள் கூறினர்.வடகெரோலைனாவில் உள்ள ஃபிளாட் ராக் பகுதியில் பலர் மின்சாரமின்றி தவித்தனர்.எரிவாயுத் தோம்புக்காகப் பலர் மணிக்கணக்கில் நீண்ட வரிசையில் காத்துக்கொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.புயலால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு இவ்வாரம் நேரில் சென்று ஆய்வு நடத்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன் திட்டமிட்டுள்ளதாக வெள்ளை மாளிகை கூறியது.பாதிப்பட்ட மாநிலங்களில் மீட்புப் பணிகளை நடத்த தேவையான உதவி உடனடியாக வழங்கப்படும் என்று அதிபர் பைடன் உறுதி அளித்துள்ளார்.புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்பு, இழப்பு அதிர்ச்சி அளிப்பதாக அவர் கூறினார்.