லட்டு விவகாரம்: சந்திரபாபு நாயுடுவுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்

  தமிழ் முரசு
லட்டு விவகாரம்: சந்திரபாபு நாயுடுவுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்

புதுடெல்லி: திருப்பதி லட்டு விவகாரத்தில் ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான முந்தைய ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் ஆட்சியில் திருப்பதி லட்டு தயாரிக்க நெய்க்கு பதிலாக விலங்கு கொழுப்பு போன்ற தரமற்ற பொருள்கள் பயன்படுத்தப்பட்டதாக முதல்வரும் தெலுங்கு தேசக் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு குற்றஞ்சாட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட மூலப்பொருள்களில் மாட்டுக் கொழுப்பு, பன்றி கொழுப்பு, மீன் எண்ணெய் போன்ற கலப்படங்கள் இருந்ததாக தெரிவிக்கும் கடந்த ஜூலை மாத ஆய்வறிக்கையை ஆளும் தெலுங்கு தேசம் கட்சி அண்மையில் வெளியிட்டது. இதையடுத்து இந்த விவகாரம் நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதே நேரம், முதல்வா் சந்திரபாபு நாயுடுவின் குற்றச்சாட்டை ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் கட்சி மறுத்துள்ளது. இதுகுறித்து ஆந்திர உயர்நீதிமன்றத்தில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி வழக்கு தொடர்ந்துள்ளது. இதற்கிடையே திருப்பதி லட்டு விவகாரத்தில் உண்மைத்தன்மையை ஆராய வேண்டும், சிறப்பு விசாரணைக் குழுவை அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளுடன் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி உள்ளிட்டோர் அளித்த மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் திங்கட்கிழமை விசாரணைக்கு வந்தன. இந்த மனுக்களை விசாரித்த பி. ஆர். கவாய் தலைமையிலான அமர்வு, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பி கண்டனம் தெரிவித்தது. ‘திருப்பதி லட்டில் கலப்படம் குறித்து கடந்த ஜூலை மாதம் ஆய்வு செய்து அதன் அறிக்கையை டிசம்பர் மாதம் வெளியிட்டதன் காரணம் என்ன, முதல்வர் என்ற பொறுப்பான பதவியில் இருக்கும் நீங்கள், ஏன் இந்த விவகாரத்தை நேரடியாக ஊடகங்களிடம் எடுத்துச் சென்றீர்கள், பக்தர்களின் உணர்வுகளைப் பாதிக்கும் வகையில் இதுபோன்ற ஒரு அறிக்கை மாநில அரசால் வெளியிடப்பட்டிருக்க வேண்டுமா? மேலும், நீங்கள் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை தெளிவானதாக இல்லை. ஆய்வு மாதிரியில் பயன்படுத்தப்பட்ட நெய்தான் லட்டு தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டது என்பது இதில் குறிப்பிடப்படவில்லை என்று அமர்வு சாடியுள்ளது. கடவுள் விவகாரத்தில் அரசியலை ஆந்திர அரசு தள்ளி வைக்க வேண்டும் என விரும்புகிறோம் என்று நீதிபதிகள் அறிவுறுத்தினர் இதற்கு சந்திரபாபு நாயுடுவிடமிருந்து பதில் எதுவும் வரவில்லை.

மூலக்கதை