யுனைடெட்டை சூறையாடிய ஸ்பர்ஸ்
மான்செஸ்டர்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்தாட்டத்தில் மான்செஸ்டர் யுனைடெட்டை 3-0 எனும் கோல் கணக்கில் திக்குமுக்காடச் செய்தது டோட்டன்ஹம் ஹாட்ஸ்பர்.ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 30) நடைபெற்ற ஆட்டத்தில் பிரெனன் ஜான்சன், டேஜான் குலுசெவ்ஸ்கி, டோமினிக் சொலாங்கி ஆகியோர் ஸ்பர்சின் கோல்களைப் போட்டனர். ஆட்டம் தொடங்கி சில நிமிடங்களிலேயே முதல் கோலை விட்டுக்கொடுத்த யுனைடெட்டின் அணித்தலைவர் புரூனோ ஃபெர்னாண்டஸ் தப்பாட்டம் காரணமாக முற்பாதியாட்டத்தில் சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு ஆட்டத்திலிருந்து நீக்கப்பட்டார்.ஃபெர்னாண்டெஸ் ஆட்டத்திலிருந்து நீக்கப்பட்டது யுனைடெட்டுக்கு மரண அடியாக அமைந்தது. சிறப்பாக விளையாடிய ஸ்பர்சைப் பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டது.ஏற்கெனவே பிரச்சினைகளை எதிர்கொள்ளும் யுனைடெட் நிர்வாகி எரிக் டென் ஹாக் மீது இத்தோல்வி மேலும் நெருக்குதலை ஏற்படுத்தியுள்ளது. அவர் பணிநீக்கம் செய்யப்படக்கூடும் என்று பலகாலமாகச் சொல்லப்பட்டு வரும் நிலையில் ஒரு கட்டத்தில் யுனைடெட்டின் உரிமையாளர்கள் பொறுமை இழக்கக்கூடும் என்று கூறப்பட்டு வருகிறது.புதிய பிரிமியர் லீக் பருவத்தின் தொடக்கத்தில் சிரமப்பட்டு வந்த ஸ்பர்சுக்கு இந்த வெற்றி இன்ப அதிர்ச்சியாக அமைந்தது. ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மற்றொரு பிரிமியர் லீக் ஆட்டத்தில் ஆஸ்டன் வில்லாவும் இப்சுவிச் டவுனும் 2-2 என மிநிலை கண்டன.