டெஸ்ட் கிரிக்கெட்டில் 300 விக்கெட்டுகள் கைப்பற்றி சாதனை படைத்த பின் ஜடேஜா கூறியது என்ன..?
கான்பூர், இந்தியா - வங்காளதேசம் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கான்பூரில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதல் இன்னிங்சை தொடங்கிய வங்காளதேசம் முதல் நாளில் 35 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 107 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது. அதனால் முதல் நாள் ஆட்டம் அத்துடன் நிறுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து 2-வது மற்றும் 3-வது நாள் ஆட்டங்கள் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டன.இந்நிலையில் 4-வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. தொடர்ந்து பேட்டிங் செய்த வங்காளதேசம் முதல் இன்னிங்சில் 233 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக மொமினுல் ஹக் 107 ரன்கள் அடிக்க, இந்தியா தரப்பில் அதிகபட்சமாக பும்ரா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா அதிரடியாக விளையாடி 34.4 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 285 ரன்கள் அடித்த நிலையில் டிக்ளேர் செய்தது. இது வங்காளதேசத்தை விட 52 ரன்கள் முன்னிலையாகும். இந்தியா தரப்பில் அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 72 ரன்களும், கே.எல். ராகுல் 68 ரன்களும் அடித்தனர். வங்காளதேச தரப்பில் ஷகிப் அல் ஹசன் மற்றும் மெஹிதி ஹசன் மிராஸ் தலா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினர். பின்னர் 52 ரன்கள் பின்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய வங்காளதேசம் 26 ரன்களுக்குள் 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ஹசன் மக்மூத் 4 ரன்களுடனும், மொமினுல் ஹக் ரன் எதுவுமின்றியும் களத்தில் உள்ளனர். இந்தியா தரப்பில் அஸ்வின் 2 விக்கெட்டுகள் வீழ்த்தி உள்ளார். முன்னதாக இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் ரவீந்திர ஜடேஜா 1 விக்கெட் வீழ்த்தினார். இது டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது 300-வது விக்கெட்டாக பதிவானது. இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 300 விக்கெட்டுகள் எடுத்த முதல் இந்திய இடது கை ஸ்பின்னர் என்ற சாதனையை ஜடேஜா படைத்தார். மேலும் ஜாம்பவான் கபில் தேவை முந்தி வேகமாக 3000 ரன்கள் மற்றும் 300 விக்கெட்டுகள் எடுத்த இந்திய வீரர் என்ற சாதனையையும் ஜடேஜா படைத்தார். ஆரம்பத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு சரிப்பட்டு வரமாட்டேன் என்று சந்தித்த விமர்சனங்களை தாண்டி தற்போது சாதித்தது பற்றி ஜடேஜா பேசியது பின்வருமாறு:-"300 விக்கெட்டுகள் எடுத்தது சிறப்பானது. 10 வருடங்களாக டெஸ்ட் கிரிக்கெட்டில் நான் விளையாடி வருகிறேன். ஒரு வழியாக இந்த சாதனையை தொட்டுள்ளேன். இதற்காக பெருமைப்படுகிறேன். இந்திய ஜெர்ஸியை அணிந்து விளையாடுவது எப்போதும் மகிழ்ச்சியை கொடுக்கும். ஒரு இளம் வீரராக நான் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் விளையாடத் தொடங்கினேன். அப்போது நான் வெள்ளைப் பந்து ஸ்பெசலிஸ்டாக மட்டுமே இருப்பேன் என்று பலரும் கூறினார்கள். அங்கிருந்து சீராக என்னுடைய ஆட்டத்தை முன்னேற்றினேன். அது கடந்த சில வருடங்களாக நல்ல பலனை கொடுக்கிறது. பேட்டிங் செய்ய செல்லும்போது எனக்கு நானே கொஞ்சம் நேரம் கொடுத்து சூழ்நிலையை புரிந்து விளையாடப் பார்க்கிறேன். பந்துக்கு தகுந்தாற்போல் ஷாட்டுகளை அடிக்கிறேன். இப்போட்டியில் வகுத்த திட்டத்திற்கு தகுந்தாற்போல் நாங்கள் பேட்டிங் செய்துள்ளோம். வங்காளதேசத்தை விரைவாக அவுட் செய்வோம் என்று நம்புகிறேன்" என கூறினார்.