வானிலை முன்னறிவிப்புகளைத் தமிழிலேயே வழங்கும் புதிய செயலி

  தமிழ் முரசு
வானிலை முன்னறிவிப்புகளைத் தமிழிலேயே வழங்கும் புதிய செயலி

சென்னை: வானிலை முன்னறிவிப்புகளைத் தமிழிலேயே அறிந்துகொள்ள ஏதுவாக TN-Alert எனும் கைப்பேசி செயலியைத் தமிழக அரசு உருவாக்கி உள்ளதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இதன்மூலம் வானிலை முன்னெச்சரிக்கை, தற்போதைய வானிலை, மழைப்பொழிவு அளவு, நீர்த்தேக்கங்களில் நீர் இருப்பு உள்ளிட்ட விவரங்களைத் தமிழிலேயே அறிந்துகொள்ள இயலும். தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் திங்கட்கிழமையன்று (செப்டம்பர் 30) அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது, “பெய்த மழையின்‌ அளவு எவ்வளவு என்பது அது பெய்கின்ற நேரத்தில்‌ தெரிந்தால்தான்‌, அணைகளில்‌ நீர்‌ திறப்பு மேலாண்மை, வெள்ள முன்னெச்சரிக்கை தகவல்களை வழங்குதல்‌ உள்ளிட்ட பல்வேறு பணிகளைச்‌ சரியாகச்‌ செய்ய முடியும்‌. அதற்காக, நாம்‌ தற்போது 1,400 தானியங்கி மழைமானிகளையும்‌, 100 தானியங்கி வானிலை மையங்களையும்‌ நிறுவி, நிகழ்நேரத் தகவல்களைப் பெற்று வருகிறோம்‌.“இந்தத்‌ தகவல்கள்‌ பொதுமக்களுக்கும்‌ அவ்வப்போது தெரிவிக்கப்படுவது அவசியம். அப்போதுதான், அவர்கள்‌ தங்களுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை திட்டமிட ஏதுவாக இருக்கும்‌. அந்த நோக்கத்துடன் ‘TN-Alert’ செயலியை உருவாக்கி இருக்கிறோம்,” என்று திரு ஸ்டாலின் கூறினார். மழைக்காலத்தில் அதிகம் பாதிக்கப்படுவது மீனவத் தோழர்கள்தான் எனக் குறிப்பிட்ட அவர், ஆழ்கடலில் மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்களுக்கு புயல், கனமழை குறித்த தகவல்களை நவீன தொலைத்தொடர்புக் கருவிகள் மூலமாக உரிய நேரத்தில் கொண்டு சேர்க்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்தார். மேலும், வெள்ளத் தடுப்பு தொடர்பான பல்வேறு பணிகளை பருவமழை தொடங்கும் முன்னரே விரைந்து முடிக்குமாறும் அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டார். அதற்கேதுவாக, அந்தந்த மாவட்டத்தைப் பற்றி முழுமையாக அறிந்த மூத்த அலுவலர்கள் கண்காணிப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் நிகழ்நேர வெள்ள முன்னெச்சரிக்கை அமைப்பு ஏற்கெனவே அமைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை