மதுரையில் வெடிகுண்டு மிரட்டல்: 3 பள்ளிகளுக்கு விடுப்பு

  தமிழ் முரசு
மதுரையில் வெடிகுண்டு மிரட்டல்: 3 பள்ளிகளுக்கு விடுப்பு

மதுரை: மதுரையில் 3 பிரபலப் பள்ளிகளுக்கு திங்கட்கிழமை (செப்டம்பர் 30) வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் நடத்திய சோதனையில் அது புரளி எனத் தெரியவந்தது. வெடிகுண்டு மிரட்டல் காரணமாக, 3 பள்ளிகளுக்கு விடுப்பு கொடுக்கப்பட்டது.மதுரை நரிமேடு பகுதியில் உள்ள ஒரு பள்ளிக்கும், அனுப்பானடி பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கும், பொன்மேனி பகுதியில் உள்ள ஒரு பள்ளிக்கும் திங்கட்கிழமை (செப்டம்பர் 30) மின்னஞ்சல் வாயிலாக அந்த மிரட்டல் விடுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, அந்த 3 பள்ளி நிர்வாகங்களும் காவல்துறையில் புகார் செய்தன. பள்ளி வளாகத்தில் வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய்கள் உதவியுடன் சோதனை நடத்தப்பட்டது.ஆனால் சந்தேகத்துக்குரிய எந்தப் பொருள்களும் கிடைக்கவில்லை. அதனால் மிரட்டல் வெறும் புரளி என உறுதிசெய்யப்பட்டது. இருந்தாலும் அந்த 3 பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் உட்பட யாரும் செல்லவேண்டாம் என்று பள்ளி நிர்வாகத்தினர் அறிவுறுத்தியுள்ளனர். இந்நிலையில், மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

மூலக்கதை