ஜம்மு - காஷ்மீர் சட்டமன்றத் தேர்தலில் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு

  தமிழ் முரசு
ஜம்மு  காஷ்மீர் சட்டமன்றத் தேர்தலில் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு

ஸ்ரீநகர்: ஜம்மு- காஷ்மீர் சட்டமன்றத் தேர்தலுக்கான இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. 40 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவு கடந்த 2019ஆம் ஆண்டு ரத்து செய்யப்பட்டது. அதையடுத்து காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக அது பிரிக்கப்பட்டது. இந்நிலையில், 10 ஆண்டுகளுக்குப் பிறகு, காஷ்மீரில் சட்டமன்றத் தேர்தல் நடக்கிறது. 90 தொகுதிகள் கொண்ட காஷ்மீரில் மூன்று கட்டங்களாகத் தேர்தல் நடக்கிறது. செப்டம்பர் 18ஆம் தேதி 24 தொகுதிகளில் முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. அதில் 61.38 விழுக்காட்டு வாக்குகள் பதிவாயின. பின்னர் செப்டம்பர் 25ஆம் தேதி 26 தொகுதிகளில் இரண்டாம் கட்டத் தேர்தல் நடந்தது. அதில் 57.31 விழுக்காட்டு வாக்குகள் பதிவானதாகக் கூறப்பட்டது. இந்நிலையில், 40 சட்டமன்றத் தொகுதிகளில் அக்டோபர் 1ஆம் தேதி இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றுவருகிறது. இந்திய நேரப்படி காலை 7 மணிக்குத் (சிங்கப்பூரில் காலை 9.30 மணி) தொடங்கியது. காலை 9 மணி நிலவரப்படி 11.60 சதவீத வாக்குகள் பதிவானதாகத் தெரிவிக்கப்பட்டது.மாலை 6 மணி வரை நடைபெறும் வாக்குப்பதிவை முன்னிட்டு ஜம்மு காஷ்மீரில் பலத்த பாதுகாப்பு ஏற்படுகள் செய்யப்பட்டுள்ளன.

மூலக்கதை