பார்க்கும் இடமெல்லாம் கிளிகள்; திணறும் மக்கள்

  தமிழ் முரசு
பார்க்கும் இடமெல்லாம் கிளிகள்; திணறும் மக்கள்

ஹிலாரியோ அஸ்காசுபி: அர்ஜென்டினாவின் கிழக்கு அட்லாண்டிக் கரையோரத்தில் அமைந்துள்ளது ஹிலாரியோ அஸ்காசுபி நகரம்.புதிய பிரச்சினையைச் சந்திக்கின்றனர் இந்த ஊர் மக்கள்.மேனியில் பச்சை-மஞ்சள்-சிவப்பு நிறங்களைக் கொண்ட ஆயிரக்கணக்கான கிளிகள் இங்குப் படையெடுத்துள்ளன.சுற்றுவட்டார மலைகளில் உள்ள காடுகள் அழிக்கப்பட்டதால் கிளிகள் நகருக்குள் படையெடுப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.மின்கம்பிகளைக் கடித்துவிடுகின்றன கிளிகள். இதனால் மின்தடை ஏற்படுவது ஒருபக்கம் இருக்க, இடைவிடாத கீச்சொலியும் பார்க்கும் இடமெல்லாம் இவற்றின் எச்சமும் நகர்வாசிகளுக்குத் தொந்தரவாக இருக்கிறது.கடந்த ஆண்டுகளில் அர்ஜென்டினாவின் வனப்பகுதிகள் படிப்படியாக அழிந்துவரும் நிலையில் உணவு, உறைவிடம், நீர் தேடி இந்தக் கிளிகள் அருகிலுள்ள நகரங்களுக்குள் செல்வதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.தற்போது நகரில் வசிக்கும் மனிதர்களுக்கும் கிளிகளுக்குமான விகிதம் 1:10ஆக இருப்பதாகக் கூறப்படுகிறது.இலையுதிர் காலத்திலும் குளிர் காலத்திலும் இங்கு வரும் கிளிகள், கோடையில் இனப்பெருக்கத்திற்காக தென்பக்க மலைச்சிகரங்களுக்குச் சென்றுவிடுகின்றன.வீடுகள், தேவாலயம், கட்டடங்கள், மின்கம்பிகள் எனத் திரும்பிய பக்கமெல்லாம் காணப்படும் கிளிகளை அச்சுறுத்தி விரட்ட ஊர் மக்கள் கையாண்ட உத்திகள் எதுவும் பலனளிக்கவில்லை.இயற்கைச் சூழல்களை மீட்டெடுக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று வலியுறுத்தும் விஞ்ஞானிகள் அதுவரை மனிதர்களும் கிளிகளும் கூடுமானவரை இணக்கமாக வாழும் வழிகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்கின்றனர்.

மூலக்கதை