மகாத்மா காந்தி உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தியபோது கேரள கவர்னரின் துண்டில் பற்றிய தீ
திருவனந்தபுரம்,கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் மகாத்மா காந்தி வந்து சென்ற அகத்தேதரா என்ற இடத்தில் உள்ள 'சபரி' ஆசிரமத்தின் நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கேரள கவர்னர் ஆரிப் முகமது கான் பங்கேற்றிருந்தார். அங்கிருந்த மகாத்மா காந்தியின் உருவப்படத்திற்கு அவர் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அப்போது ஆரிப் முகமது கான் கழுத்தில் அணிந்திருந்த துண்டு, மகாத்மா காந்தியின் உருவப்படத்திற்கு முன்னால் வைக்கப்பட்டிருந்த விளக்கில் பட்டு தீப்பற்றி எரிந்தது. இதனை அவர் கவனிக்காத நிலையில், அருகில் இருந்தவர்கள் உடனடியாக கவர்னரை எச்சரிக்கை செய்து அவரது கழுத்தில் இருந்த துண்டை அகற்றி தீயை அணைத்தனர்.இதனால் தீ மேலும் பரவாமல் தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவத்தில் கவர்னருக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. கவர்னர் கழுத்தில் அணிந்திருந்த துண்டில் திடீரென தீப்பற்றி எரிந்ததால் நிகழ்ச்சியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.