ஜப்பான் பிரதமராக ஷிகெரு இஷிபா பொறுப்பேற்றார்; அமைச்சரவையும் அறிவிக்கப்பட்டது

  தமிழ் முரசு
ஜப்பான் பிரதமராக ஷிகெரு இஷிபா பொறுப்பேற்றார்; அமைச்சரவையும் அறிவிக்கப்பட்டது

தோக்கியோ: ஜப்பான் நாட்டின் பிரதமராக 67 வயது ஷிகெரு இஷிபா செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 1) பொறுப்பேற்றார்.அவர் தலைமையிலான அரசாங்கம் ஜப்பான் மக்களின் நம்பிக்கையை மீண்டும் முழுமையாக பெற நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சீனாவால் ஏற்படும் ராணுவ அச்சுறுத்தல், பொருளியல் மந்தம் உள்ளிட்ட பல பிரச்சினைகளையும் இஷிபா சமாளிக்க வேண்டும் என்று கவனிப்பாளர்கள் கருதுகின்றனர். முன்னாள் தற்காப்பு அமைச்சரான இஷிபா, ஜப்பான் நாடாளுமன்றத்தை கலைக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் விரைவில் பொதுத் தேர்தல் நடத்த எண்ணம் கொண்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆளும் மிதவாத ஜனநாயகக் கட்சியின் தலைவராக உள்ள இஷிபாவுக்கு செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை கிடைத்தது. அதைத் தொடர்ந்து அவர் பிரதமரானார். அதைத்தொடர்ந்து, திரு இஷிபா அவரது அமைச்சரவையை அறிவித்தார். அதில் 19 அமைச்சர்கள் இடம்பெற்றிருந்தனர். அவர்களில் இருவர் பெண்கள். முன்னாள் அமைச்சரவை தலைவர் கட்சுனோபு கட்டோ நிதியமைச்சராக அறிவிக்கப்பட்டார். திரு ஜென் நக்கடானிக்கு தற்காப்பு அமைச்சு வழங்கப்பட்டது. வெளியுறவு அமைச்சு திரு டக்கேசிக்கு கொடுக்கப்பட்டது. அவர் இஷிபாவுக்கு மிகவும் நெருக்கமானவர் என்று ஜப்பானிய ஊடகங்கள் கூறுகின்றன. பிரதமர் இஷிபா இதற்கு முன்னர் மூன்று முறை அமைச்சராக செயல்பட்டுள்ளார். ஆளும் மிதவாத ஜனநாயகக் கட்சியின் தலைவருக்கான போட்டியில் இஷிபா நான்கு முறை தோற்றார். இறுதியில் ஐந்தாவது முறையாக போட்டியிட்டு கட்சியின் தலைவராகி நாட்டின் பிரதமரானார். இந்நிலையில், ஜப்பான் பங்குச் சந்தை வீழ்ச்சி கண்டுள்ளது. இஷிபா பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்ற செய்தி வெளியான முதல் பங்குசந்தையில் புள்ளிகள் சரிந்தன. திங்கட்கிழமை 5 விழுக்காடு புள்ளிகள் சரிந்தன. இருப்பினும் அது செவ்வாய்க்கிழமை சற்று மீண்டுவந்தது. இஷிபா ஜப்பானின் நிதி சார்ந்த கொள்கைகளில் அதிக கவனம் செலுத்துவார் என்று கூறப்படுகிறது. மேலும், அவர் வரிகள் தொடர்பாக புதிய அறிவிப்புகளை வெளியிடுவார் என்று கூறப்படுகிறது.

மூலக்கதை