மழை குறுக்கிட்டும் வெற்றியை இறுகப் பற்றிய இந்திய அணி

  தமிழ் முரசு
மழை குறுக்கிட்டும் வெற்றியை இறுகப் பற்றிய இந்திய அணி

கான்பூர்: கிட்டத்தட்ட இரண்டரை நாள் ஆட்டம் மழையால் தடைபட்டபோதும் பங்ளாதேஷ் கிரிக்கெட் அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் வெற்றியைத் தடுக்க முடியவில்லை.இந்தியாவிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பங்ளாதேஷ் அணி, சென்னையில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் 280 ஓட்ட வித்தியாசத்தில் தோற்றுப்போனது. இந்நிலையில், செப்டம்பர் 27ஆம் தேதி கான்பூரில் இரண்டாவது டெஸ்ட் போட்டி தொடங்கியது. முதல் நாளில் பங்ளாதேஷ் அணி மூன்று விக்கெட் இழப்பிற்கு 107 ஓட்டங்களை எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது. அதனால், முதல் நாளின் எஞ்சிய நேரமும், இரண்டாம், மூன்றாம் நாள் ஆட்டமும் நடக்கவில்லை. நான்காம் நாளில் தொடர்ந்து பந்தடித்த பங்ளாதேஷ் அணி முதல் இன்னிங்சில் 233 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. அதன்பின் பந்தடித்த இந்திய அணி மளமளவென ஓட்டம் குவித்தது. 34.4 ஓவர்களில் ஒன்பது விக்கெட் இழப்பிற்கு 285 ஓட்டங்களை எடுத்த நிலையில், அவ்வணி முதல் இன்னிங்சை முடித்துக்கொண்டது. பின்னர் இரண்டாம் இன்னிங்சைத் தொடங்கிய பங்ளாதேஷ் அணி நான்காம் நாள் முடிவில் இரண்டு விக்கெட் இழப்பிற்கு 26 ஓட்டங்களை எடுத்திருந்தது. போட்டியின் ஐந்தாம் நாளான செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 1) அவ்வணி தனது இரண்டாம் இன்னிங்சில் 146 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. அதனையடுத்து, 95 ஓட்டங்கள் என்ற இலக்குடன் இரண்டாம் இன்னிங்சைத் தொடங்கிய இந்திய அணி, மூன்று விக்கெட்டுகளை மட்டும் இழந்து இலக்கை எட்டி வெற்றி பெற்றது. இதனையடுத்து, டெஸ்ட் தொடரையும் 2-0 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது. இரண்டு இன்னிங்ஸ்களிலும் அரைசதம் அடித்த இந்திய அணியின் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆட்ட நாயகனாகவும் ரவிச்சந்திரன் அஸ்வின் தொடர் நாயகனாகவும் அறிவிக்கப்பட்டனர். அடுத்ததாக, இந்தியா - பங்ளாதேஷ் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் வரும் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 6) தொடங்குகிறது.

மூலக்கதை