ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்திற்கு எதிர்காலத்தில் அனுமதி வழங்க மறுக்கக்கூடாது: ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு

  தினத்தந்தி
ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்திற்கு எதிர்காலத்தில் அனுமதி வழங்க மறுக்கக்கூடாது: ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு

சென்னை:விஜயதசமியை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் வருகிற 6-ந்தேதி அணிவகுப்பு ஊர்வலம் நடத்த ஆர்.எஸ்.எஸ். அமைப்பு முடிவு சய்தது. இதற்கு போலீசார் அனுமதி வழங்காததால், 58 இடங்களில் ஊர்வலம் நடத்த அனுமதிக்கும்படி போலீசாருக்கு உத்தரவிட கோரி சென்னை ஐகோர்ட்டில் ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள் வழக்கு தொடர்ந்தனர்.இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, 16 இடங்களை தவிர மற்ற இடங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டதாகவும், மீதமுள்ள இடங்கள் பரிசீலனையில் உள்ளது என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அனைத்து விண்ணப்பங்களையும் பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அனுமதிக்கப்படாமல் இருந்த 16 இடங்களில் 10 இடங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள 6 இடங்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்றும் காவல்துறை தரப்பில் கூறி, அதற்கான காரணம் தெரிவிக்கப்பட்டது.ஆவடி போலீஸ் கமிஷனர் கட்டுப்பாட்டில் உள்ள மாங்காடு, கொரட்டூர், தாம்பரம் போலீஸ் கமிஷனர் கட்டுப்பாட்டில் உள்ள மேடவாக்கம், சேலையூர், கோவை ரத்தினபுரி, தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் ஆகிய இடங்களுக்கு அனுமதி வழங்கவில்லை என்று போலீஸ் தரப்பு வக்கீல் முகிலன் கூறினார்.மாங்காடு, ரத்தினபுரி ஆகிய இடங்களில் உள்ள அமிர்தாவித்யாலாயா பள்ளி நிர்வாகமும், கொரட்டூரில் நல்லிக்குப்புசாமி விவேகானந்தா பள்ளி நிர்வாகமும் ஆர்எஸ்எஸ் பொதுக்கூட்டத்தை தங்கள் பள்ளி வளாகத்தில் நடத்த அனுமதி வழங்கவில்லை. மேடவாக்கத்தில் மெட்ரோ ரெயில் பணி நடைபெறுகிறது. சேலையூரில் பஸ் செல்லும் மெயின் ரோட்டில் கேட்பதால் அனுமதி வழங்கவில்லை. குலசேகரப்பட்டினம் தசரா பண்டிகையை முன்னிட்டு சாயர்புரத்தில் அனுமதி வழங்கவில்லை என்றும் விளக்கம் அளித்தார்.இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு வருமாறு:ஒரு குறிப்பிட்ட மதத்தினர் வாழும் பகுதி, எதிர்கொள்கை நிலைபாடு கொண்ட மக்கள் வாழும் பகுதி என்று கூறி ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு அனுமதி வழங்க மறுக்கக்கூடாது. பொது சாலை என்பது பொதுமக்களுக்குத்தான். தனி நபர்களுக்கு மட்டும் சொந்தம் இல்லை. அதனால், இந்த காரணத்தை கூறி அனுமதி மறுக்கக்கூடாது. ஏற்கனவே, ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு அனுமதி வழங்குவது குறித்து நிபந்தனையுடன் கடந்த ஜனவரி மாதம் இந்த ஐகோர்ட்டு விரிவான உத்தரவை பிறப்பித்துள்ளது. அந்த நிபந்தனையுடன் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு அனுமதி வழங்கவேண்டும். எதிர்காலத்தில், அனுமதி மறுக்கவோ, புதிய நிபந்தனைகளை விதிக்கவோ கூடாது. மேலும், மாங்காடு, ரத்தினபுரி, கொரட்டூர் பகுதிகளில் பள்ளி நிர்வாகத்திடம் அனுமதி கடிதம் வாங்கிக் கொடுத்தால், அங்கு ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலத்துக்கும், பொதுக்கூட்டத்துக்கும் போலீசார் அனுமதி வழங்கவேண்டும். சாயர்புரத்தில் வருகிற 20-ம் தேதி ஊர்வலம் செல்ல முடிவு செய்துள்ளதால், அன்று அனுமதி வழங்கவேண்டும். கடந்த ஆண்டு சேலையூரில் ஊர்வலம் நடத்தவில்லை. அதனால், கடந்த ஆண்டு ஊர்வலம் நடந்த இடமான சிட்லபாக்கத்தில் அனுமதி கேட்டால், அவர்களுக்கு போலீசார் அனுமதி வழங்கவேண்டும். மேடவாக்கத்தில் மாற்று வழியில் ஊர்வலம் நடத்த அனுமதிக்க வேண்டும்.இவ்வாறு நீதிபதி தெரிவித்தார்.

மூலக்கதை