சாம்சுங் நிறுவன ஊழியர்கள் 912 பேர் கைது

  தமிழ் முரசு
சாம்சுங் நிறுவன ஊழியர்கள் 912 பேர் கைது

சென்னை: சாம்சுங் நிறுவனத்திற்கெதிரான ஊழியர்களின் போராட்டம் நான்காவது வாரத்தை எட்டியுள்ள நிலையில், அதன் ஊழியர்கள், தொழிற்சங்க உறுப்பினர்கள் என 912 பேரைத் தமிழகக் காவல்துறை கைதுசெய்துள்ளது.சென்னைக்கு அருகிலுள்ள சாம்சுங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்திற்கு அருகில், தற்காலிகக் கூடாரம் அமைத்து கடந்த செப்டம்பர் 9ஆம் தேதியிலிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் போராடி வருகின்றனர். இதனால், தொழிற்சாலையில் உற்பத்திப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.இந்நிலையில், தங்களது கோரிக்கையை நிறைவேற்றக்கோரி செவ்வாய்க்கிழமையன்று (அக்டோபர் 1) அவர்கள் ஊர்வலமாகச் சென்றனர். ஆனால், அதற்கு அவர்கள் உரிய அனுமதி பெறவில்லை என்றும் அதனால் பொதுமக்களுக்கு இடையூறாக இருந்தது என்றும் கூறி, கிட்டத்தட்ட 850 ஊழியர்களும் சிஐடியு தொழிற்சங்க உறுப்பினர்கள் 60 பேரும் கைதுசெய்யப்பட்டதாகக் காவல்துறை உயரதிகாரி சார்ல்ஸ் சாம் ராஜதுரை தெரிவித்தார்.“நான்கு திருமண மண்டபங்களில் அவர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை விடுவிப்பது குறித்துப் பின்னர் முடிவெடுக்கப்படும்,” என்று அவர் கூறினார். இந்தியாவில் ஆலைகளை நிறுவி உற்பத்தி செய்யுமாறு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஊக்குவித்து வருகிறது. இந்நிலையில், சாம்சுங் நிறுவனத்தை எதிர்த்து அதன் ஊழியர்கள் போராடிவருவது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் அண்மைய ஆண்டுகளில் இடம்பெறும் ஆகப் பெரிய போராட்டம் இது என்றும் கூறப்பட்டது. ஊர்வலமாகச் சென்ற ஊழியர்கள் கைதுசெய்யப்பட்டது குறித்து சாம்சுங் நிறுவனம் எதுவும் கருத்துரைக்கவில்லை என்று ராய்ட்டர்ஸ் செய்தி தெரிவித்தது. அந்த ஆலையில் ஏறத்தாழ 1,800 பேர் பணிபுரிந்து வருகின்றனர். அங்கு குளிர்பதனப் பெட்டிகள், தொலைக்காட்சிகள், சலவை இயந்திரங்கள் போன்றவை தயாரிக்கப்படுகின்றன.இதனிடையே, உற்பத்தியில் ஏற்பட்டுள்ள பாதிப்பைக் குறைக்க ஒப்பந்த ஊழியர்களையும் தொழில்பழகுநர்களையும் சாம்சுங் நிறுவனம் பணியில் ஈடுபடுத்தியுள்ளதாகத் தகவலறிந்த வட்டாரம் தெரிவித்தது. அந்த ஆலையில் பணியாற்றும் ஊழியர்களுக்குச் சராசரியாக மாதம் 25,000 ரூபாய் ஊதியம் வழங்கப்படும் நிலையில், அதனை 36,000 ரூபாயாக உயர்த்த வேண்டும் எனக் கோரி, ஊழியர்கள் போராடி வருகின்றனர்.

மூலக்கதை