வலுவான பெண்ணாக வலம்வர விரும்புகிறேன்: நிகிலா சங்கர்

  தமிழ் முரசு
வலுவான பெண்ணாக வலம்வர விரும்புகிறேன்: நிகிலா சங்கர்

முன்பெல்லாம், திரையுலகில் நாயகியாக அறிமுகமாக விரும்புவோர், அதற்கு முன்பு தங்களுடைய முகம் ஊடகங்களில் வெளியாகிவிடக் கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருப்பார்கள். ஆனால் தற்போது நிலைமை மாறிவிட்டது. ஆகச்சிறு கதாபாத்திரங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தாலும், எப்படியாவது வெள்ளித்திரையில் தலைகாட்டிவிட வேண்டும், மற்ற வாய்ப்புகள் தன்னால் தேடி வரும் என நம்புகிறார்கள் இளம் நடிகைகள். அந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளார் இளம் நாயகி நிகிலா சங்கர். ‘மாநாடு’ படத்தில் பத்து நொடிகள் மட்டுமே இடம்பெற்ற சிறிய வேடத்தில் தலைகாட்டிய இவர், பிறகு ‘கட்டா குஸ்தி’, ‘பயணிகள் கவனிக்கவும்’ ஆகிய படங்களிலும் சிறு வேடங்களில் நடித்தார். பின்னர் ‘குட் நைட்’, ‘லவ்வர்’ ஆகிய படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ள இவருக்கு, பிரபுதேவா நடிப்பில் உருவாகியுள்ள ‘பேட்ட ராப்’ படம் நல்ல பெயரை வாங்கித் தந்துள்ளது. “இதுவரை பக்கத்து வீட்டுப்பெண்ணைப் போன்ற கதாபாத்திரங்களில்தான் நடித்து வந்துள்ளேன். நான் எவ்வாறு தோற்றம் அளிக்கிறேன், பேசிப் பழகுகிறேன் என்பதன் அடிப்படையில்தான் இந்த வாய்ப்புகள் கிடைத்திருப்பதாக கருதுகிறேன்.“அனைத்துமே யதார்த்தமான உண்மைத்தன்மை வாய்ந்த கதாபாத்திரங்கள்தான். எனினும் இதுவரை எனது உண்மையான இயல்பைப் பிரதிபலிக்கும் வேடங்கள் அமையவில்லை. “நான் எப்போதுமே சுறுசுறுப்பாகவும் வலுவான ஒரு பெண்ணாகவும் வலம்வர விரும்புகிறேன். எனினும் நடிகையாக என் பணியை நான் காதலிக்கிறேன். இது மிகுந்த சவாலான பணியா என்பதை இதுவரை நான் தெரிந்துகொள்ளவில்லை. “ஆனால் இது ரசித்து, மகிழத்தக்க ஒரு வேலை என்பது மட்டும் உறுதியாகச் சொல்வேன்,” என்கிறார் நிகிலா சங்கர். ஆகச்சிறிய வேடங்களில் நடிப்பது குறித்த கேள்விக்குப் பதில் அளித்துள்ள அவர், ஓரிரு நிமிடங்கள் மட்டுமே திரையில் தோன்றும் வேடங்கள் என்றால் ரசிகர்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்கிறார். “ரசிகர்கள் மனதில் ஒருவிதப் பாதிப்பை ஏற்படுத்த விரும்புகிறேன். அதற்கு வாய்ப்பளிக்கும் வகையில் ஒரு காட்சி இருந்தால்கூட போதும். ரசிகர்கள் நம்மை நினைவில் வைத்திருப்பார்கள் என நம்புகிறேன்,” என்று சொல்லும் நிகிலா, வேடிக்கையான, ஜாலியான, துணிச்சலான பெண்ணாக திரையில் தோன்றவே விரும்புகிறாராம். தம்மால் இயன்றவரை கவர்ச்சியான வேடங்களைத் தவிர்ப்பதாகவும் சொல்கிறார். “எனக்கென சில எல்லைகளை நானே வகுத்துள்ளேன். அதன் அடிப்படையில் தேடி வந்த சில வேடங்களை நடிக்க மறுத்துள்ளேன். இதை மறைக்க வேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில் அந்த வாய்ப்புகளை ஏற்க மறுத்துவிட்டு பின்னர் வருத்தப்பட்டதில்லை. “எனக்கு என்ன தேவை என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன். நான் பணியாற்றும் படங்களைத் தேர்ந்தெடுப்பதில் இந்தத் தெளிவான அணுகுமுறை கைகொடுத்தது.“நான் இன்னும் பெரிய நடிகையாகவில்லை. எனினும் என்னை நன்கு அறிந்தவர்கள் என் மீது நம்பிக்கை கொள்ளும் அளவுக்கு பொறுப்போடு செயல்பட்டுள்ளேன் என உறுதியாகச் சொல்ல முடியும்,” என்று சொல்லும் நிகிலா சங்கர், பொறியியல் படிப்பைத்தான் மேற்கொண்டாராம். பாடகியாக வேண்டும் என்பதுதான் இவரது முதன்மை கனவாகவும் விருப்பமாகவும் இருந்துள்ளது. இன்னமும்கூட அந்தக் கனவு உள்ளதாம்.“எனது நெருக்கமான அன்பர் ஒருவர்தான், ‘நீ ஏன் நடிக்கக் கூடாது’ என்று என்னைக் கேட்டார். அதன் பிறகே நடிப்பு தேர்வுகளில் பங்கேற்கும் ஆசை மனதில் துளிர்விட்டது. “ஒரு வாய்ப்புதான் மற்றொரு வாய்ப்பை நோக்கி அழைத்துச் செல்லும் என்பார்கள். அப்படித்தான் யூடியூப் குறும் படங்களில் நடித்தேன். அதன் பிறகு, இன்றுள்ள இடத்தை அடைய முடிந்தது,” என்கிறார் நிகிலா. அவர் அடுத்து ‘சுழல்-2’, அதர்வா நடிக்கும் ‘டிஎன்ஏ’, ராகவா லாரன்சின் ‘புல்லட்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

மூலக்கதை