கடும் வீழ்ச்சியை சந்தித்த இந்திய பங்குச்சந்தை

  தினத்தந்தி
கடும் வீழ்ச்சியை சந்தித்த இந்திய பங்குச்சந்தை

மும்பை,இந்திய பங்குச்சந்தை கடந்த மாதம் புதிய உச்சத்தை தொட்ட நிலையில் இம்மாத தொடக்கத்தில் இருந்தே சரியத்தொடங்கியது.குறிப்பாக, மத்திய கிழக்கில் போர் பதற்றம் மேலும் விரிவடைந்து வருவதால் சர்வதேச அளவில் பொருளாதார நிலையற்ற தன்மை நிலவி வருகிறது. இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியதன் பின்னர் உலக அளவில் பங்குச்சந்தை பெரும் வீழ்ச்சியை சந்தித்தது. அந்த வகையில் இந்திய பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக சரிவை சந்தித்து வருகிறது.இந்நிலையில், இந்திய பங்குச்சந்தை இன்றும் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. வர்த்தக தொடக்கத்தில் ஏற்றம்பெற்ற இந்திய பங்குச்சந்தை மதியம் 12.30 மணிக்கு மேல் வீழ்ச்சியடைய தொடங்கியது.அதன்படி, வர்த்தக இறுதியில் நிப்டி 235 புள்ளிகள் சரிந்து 25 ஆயிரத்து 14 என்ற புள்ளிகளில் நிறைவடைந்தது. அதேபோல், சுமார் 400 புள்ளிகள் சரிந்த பேங்க் நிப்டி 51 ஆயிரத்து 460 என்ற புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.மேலும், 800 புள்ளிகள்வரை வீழ்ச்சியடைந்த சென்செக்ஸ் 81 ஆயிரத்து 690 என்ற புள்ளிகளில் நிறைவடைந்தது. 260 புள்ளிகள்வரை சரிந்த பின் நிப்டி 23 ஆயிரத்து 620 என்ற புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. அதேபோல், 160 புள்ளிகள்வரை வீழ்ச்சியடைந்த மிட்கேப் நிப்டி 12 ஆயிரத்து 810 என்ற புள்ளிகளில் நிறைவடைந்தது.மேலும், 360 புள்ளிகள்வரை சரிவடைந்த பேங்க் எக்ஸ் 58 ஆயிரத்து 392 என்ற புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளது. இந்திய பங்குச்சந்தை கடும் சரிவை சந்தித்துள்ளதால் முதலீட்டாளர்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளனர். அதேவேளை, சர்வதேச அளவில் சாதகமான சூழ்நிலை நிலவும் பட்சத்தில் வரும் வாரங்களில் இந்திய பங்குச்சந்தை மீண்டும் எழுச்சி அடையும் என தகவல் வெளியாகியுள்ளது.

மூலக்கதை