ஹிஸ்புல்லா பலவீனமாகிவிட்டது -இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு

  தினத்தந்தி
ஹிஸ்புல்லா பலவீனமாகிவிட்டது இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு

டெல் அவிவ்பாலஸ்தீனத்தின் காசா அமைப்பை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும், இஸ்ரேலுக்கும் இடையே கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7 ஆம் தேதி போர் ஏற்பட்டது. அப்போது முதல், காசாவின் மும்முனை தாக்குதலை இஸ்ரேல் நடத்தி வருகிறது. தரைவழியாகவும் வான்வழியாகவும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. போரில் காசாவில் மட்டும் 42 ஆயிரத்துக்கும் அதிகமான உயிர்கள் பறிபோயுள்ளன. ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவாக லெபனானில் உள்ள ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பினரின் நிலைகளை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில், ஹிஸ்புல்லா அமைப்பை அடியோடு ஒழிக்கும் நோக்கத்தில், இஸ்ரேல் ராணுவம் கடந்த மாத இறுதியில் லெபனான் மீது வான்வழி தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலில், ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டார். இதையடுத்து, லெபனானிற்குள் தரைவழியாகவும் தாக்குதல் நடத்த உள்ளதாக இஸ்ரேல் அறிவித்து தாக்குதலை தொடங்கியது. குறிப்பாக ஹிஸ்புல்லா அமைப்பின் மூத்த தலைவர்கள் மற்றும் முக்கிய தளபதிகள் இருக்கும் இடங்களை கண்டறிந்து அங்கு இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில், பெய்ரூட்டில் நடத்தப்பட்ட வான்தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய தளபதியான சுஹைல் ஹுசைன் ஹுசைனி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இஸ்ரேல் ராணுவம் கூறுகையில், "நஸ்ரல்லாவுக்கு அடுத்த இடத்தில் இருந்த தலைவரான சுஹைல் ஹுசைன் ஹுசைனியின் இருப்பிடத்தை அறிந்து துல்லியமான வான்வழி தாக்குதலை நடத்தினோம்" என்று தெரிவித்துள்ளது. இதனிடையே, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பேசுகையில், "ஹிஸ்புல்லா அமைப்பின் நஸ்ரல்லாவுக்கு அடுத்தடுத்த இடங்களில் இருந்தவர்களை வீழ்த்திவிட்டோம். ஹிஸ்புல்லா அமைப்பு பலவீனமாகவிட்டது. ஹிஸ்புல்லாவிடம் இருந்து விடுபடுங்கள். அப்போதுதான் இந்த போர் முடியும் என்று லெபனான் மக்களிடம் நான் கூறிக்கொள்கிறேன்" என்றார்.

மூலக்கதை