மத்திய அரசு நிதியை விடுவிக்காததால் தமிழகக் கல்வித்துறையினர் தவிப்பு
வாணியம்பாடி: தமிழ்நாடு அரசு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தைச் செயல்படுத்த மத்திய கல்வி அமைச்சின் திட்ட ஒப்புதல் குழுவால் 2024-2025 கல்வியாண்டுக்கு ரூ.3,585.99 கோடி தொகை ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதில், மத்திய அரசின் 60% பங்களிப்பாக அளிக்க வேண்டிய தொகை ரூ.2,151.59 கோடி ஆகும்.ஆண்டுதோறும் ஜூன் மாதம் தொடக்கத்தில் முதல் தவணைப் பெறப்பட்டு வந்த நிலையில், இந்த ஆண்டு இந்தத் தொகை உரிய காலத்தில் விடுவிக்கப்படவில்லை. இதுகுறித்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி பிரதமர் மோடியை நேரில் சந்தித்து நிதியை விடுவிக்குமாறு வலியுறுத்தினார். பின்னர் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் குழுவாகச் சென்றும் நிதியை விடுவிக்குமாறு கேட்டுப் பார்த்தனர். ஆனாலும், மத்திய அரசிடமிருந்து இதுவரை எந்தத் தகவலும் பெறப்படவில்லை.மத்திய அரசு தமிழகத்திற்கு தரவேண்டிய நிதியைச் சுணக்கப் படுத்துவதால், 32,298 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், மற்றும் ஊழியர்களுக்கான சம்பளம் வழங்கமுடியாமல் அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது என்று அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.இதனைத்தொடர்ந்து, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் புதன்கிழமை ஆசிரியர்கள் மற்றும் கல்வித்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.மத்திய அரசு தமிழ் நாட்டின் கல்வித்துறைக்கான நிதியை விடுவிக்காத சூழலில், பள்ளிக் கல்வித்துறையைச் சேர்ந்த ஆசிரியர்கள், ஊழியர்கள் நலன் கருதி தமிழ் நாடு அரசு 32,500 ஆசிரியர்களுக்கும் செப்டம்பர் மாத ஊதியத்தை விடுவித்துள்ளது. ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தின் கீழ் பணியாற்றும் அலுவலர்கள், ஆசிரியர்களுக்கு ஊதியம் விடுவிக்கப்படுவதாக அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.