கச்சா எண்ணெய் விலைகள் 4%க்குமேல் சரிவு
ஹியுஸ்டன்: இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லாவுக்கும் இடையே சண்டைநிறுத்தம் ஏற்பட சாத்தியமுள்ள நிலையில், கச்சா எண்ணெய் விலைகள் செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 8) 4 விழுக்காட்டுக்குமேல் சரிந்தன.எனினும், ஈரானில் எண்ணெய் ஆலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தக்கூடும் என்ற அச்சத்தில் விலைகள் மேலும் இறங்கவில்லை. ஆகஸ்ட்டிற்குப் பிறகு முதன்முறையாக, பிரெண்ட் கச்சா எண்ணெய் செவ்வாய்க்கிழமை பீப்பாய்க்கு US$80க்குமேல் உயர்ந்தது. மத்திய கிழக்கில் போர் விரிவடையக்கூடும் என்ற அச்சத்தில் அக்டோபர் 4ஆம் தேதி முடிவடைந்த வாரத்தில் பிரெண்ட் எண்ணெய் விலை ஏறத்தாழ 8 விழுக்காடு கூடியிருந்தது. இது, ஓராண்டுக்கும் மேலான காலகட்டத்தில், வார அடிப்படையில் பதிவான ஆக அதிக உயர்வாகும். தென் லெபனானில் இஸ்ரேல் தாக்குதலைத் தீவிரப்படுத்தியதைத் தொடர்ந்து, சண்டைநிறுத்தத்திற்கான பேச்சுவார்த்தையைத் தொடங்க ஹிஸ்புல்லா தனது கதவுகளைத் திறந்தது. ஹிஸ்புல்லா தலைவர் சையது ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அவரது இடத்தை நிரப்பவிருந்ததாகக் கூறப்பட்டவரும் கொல்லப்பட்டு விட்டதாகத் தெரிகிறது என இஸ்ரேலியத் தற்காப்பு அமைச்சர் யோவ் காலண்ட் கூறினார். அக்டோபர் 1ஆம் தேதி இஸ்ரேல் மீது ஈரான் தொடர் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதை அடுத்து, எண்ணெய் விலைகள் ஏறத் தொடங்கின. ஈரானின் தாக்குதலுக்குப் பதிலடி தரப்படும் என இஸ்ரேல் சூளுரைத்துள்ளது. இந்நிலையில், ஈரானிய எண்ணெய் ஆலைகள் மீது தாக்குதல் நடத்தப்படுவதற்கான சாத்தியம் குறைவு என்றும் வேறெந்த இலக்கைத் தாக்குவதில் இஸ்ரேல் கவனம் செலுத்தினால், எண்ணெய் விலைகள் இறங்கக்கூடும் என்றும் வல்லுநர்கள் கணிக்கின்றனர்.