ஊடகங்கள்வழி டிரம்ப், ஹாரிஸ் மோதல்
நியூயார்க்: அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளர்களான திருவாட்டி கமலா ஹாரிஸ், திரு டோனல்ரட் டிரம்ப் இருவரும் செவ்வாய்க்கிழமையன்று (அக்டோபர் 8) ஊடகங்களின்வழி ஒருவரையொருவர் தாக்கிப் பேசினர்.தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது என்று முடிவெடுக்காத வாக்காளர்களை ஈர்க்கும் நோக்கில் இருவரும் அவ்வாறு செய்தனர். இன்னும் சில வாரங்களில் நடைபெறவுள்ள தேர்தல், ஆகக் கடுமையாகப் போட்டியிடப்பட்ட அமெரிக்க அதிபர் தேர்தல்களில் ஒன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.கடந்த ஆகஸ்ட் மாத நடுப்பகுதியிலிருந்து ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த திருவாட்டி ஹாரிஸ், தேசிய அளவில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் இரண்டிலிருந்து மூன்று புள்ளிகள் வித்தியாசத்தில் முன்னணி வகித்து வருகிறார். “எனக்கு உண்மையாகவே போதுமான தூக்கம் இல்லை, இந்தத் தேர்தலால் பாதிக்கப்படக்கூடிய அம்சங்களை எண்ணி என்னால் சரியாக உறங்க முடியவில்லை,” என்றார் தற்போது துணை அதிபர் பொறுப்பை வகிக்கும் 59 வயது ஹாரிஸ். வானொலிப் பிரபலம் ஹவர்ட் ஸ்டெர்னுடன் நடைபெற்ற 70 நிமிட நேர்காணலில் திருவாட்டி ஹாரிஸ் அவ்வாறு சொன்னார்.பல்வேறு ஊடக நிகழ்ச்சிகளில் பங்கேற்றுவரும் அவர், திரு டிரம்ப்பை ஒரு செயலற்றவர் (loser) என்றும் சாடியிருந்தார் என்று தெரிவிக்கப்பட்டது.அதேவேளை, திருவாட்டி ஹாரிஸ் மிகவும் அறிவற்றவர் என்று குடியரசுக் கட்சியைச் சேர்ந்த திரு டிரம்ப் சாடினார். பழைமைவாதக் கொள்கைகளைக் கொண்ட இணையப் பிரபலம் பென் ஷப்பிரோவின் வலையொளியில் திரு டிரம்ப் அவ்வாறு கருத்துரைத்தார்.ஹெலீன் சூறாவளி தாக்கியபோது மத்திய அரசாங்க நடவடிக்கையைப் பொறுத்தவரை திருவாட்டி ஹாரிஸ் ‘காணாமற்போனார்’ என்றும் 78 வயதாகும் அவர் குற்றஞ்சாட்டினார்.வேறொரு நேர்காணலில் திரு டிரம்ப், “செல்வந்தர்களிடமிருந்து அதிக வரி வசூலிக்கக்கூடாது. இந்நாட்டில் செல்வந்தர்கள்தான் ஆக அதிக வரி செலுத்துகின்றனர்,” என்றும் குறைகூறினார்.மேலும், தேர்தல் பிரசாரம் தொடர்பில் தாம் அளிக்கும் நேர்காணல்கள், தமக்கு ஒருவகை ‘சிகிச்சை’ போன்றவை என்றும் திரு டிரம்ப் கூறியிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.