பிசைந்த மாவை முத்தமிட்டதற்காக ஊழியர் பணிநீக்கம்
சிங்கப்பூர், இந்தியா, மலேசியா உட்பட பல நாடுகளில் பலநூறு கிளைகளைக் கொண்டுள்ள ‘ஆன்டி ஏன்ஸ்’ (Auntie Anne’s) உணவுக்கடை, அதன் ஊழியர் ஒருவரைப் பணிநீக்கம் செய்துள்ளது.மலேசியாவின் ‘மிட்வேலி மெகாமால்’ கடைத்தொகுதியில் உள்ள கிளையில் வேலைபார்த்த ஊழியர் ஒருவர், பிசைந்த மாவை முத்தமிட்ட படங்கள் சமூக ஊடகத்தில் பரவலாகப் பகிரப்பட்டதை அடுத்து இவ்வாறு பணிநீக்கம் செய்யப்பட்டார்.உணவுக்கடைக்குரிய தலையணியை அணிந்திருக்கும் ஒரு பெண், உணவுத் தயாரிப்பு இடத்தில் இருப்பதாகவும் கையில் பிசைந்த மாவைக் கையில் பிடித்துக்கொண்டு வாயருகே பிடித்திருப்பதாகவும் படங்களில் தெரிகிறது.மூக்குக்கண்ணாடி அணிந்திருந்த அந்தப் பெண், முகக்கவசம் அணிந்திருந்தபோதும் அதைக் கீழே இறக்கியவாறு தமது உதடுகளைப் பிசைந்த மாவின் மீது வைத்தார்.மேலும், மாவை அந்தப் பெண் வெறுங்கைகளுடன் கையாள்வதாகவும் தெரிகிறது.இதையடுத்து, படங்கள் குறித்து இணையவாசிகள் கடுமையுடன் பதிவிட்ட நிலையில், அக்டோபர் 8ஆம் தேதி அந்த ஊழியர் தொடர்பான சம்பவத்தைப் பற்றித் தாங்கள் அறிந்துள்ளதாக உணவு வர்த்தகம் அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டது.பின்னர், பெண்ணின் பெயரையும் வெளியிட்டு அவர் உடனடியாகப் பணிநீக்கம் செய்யப்பட்டுவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.இந்நிலையில், கிளை தற்காலிகமாக மூடப்படும் என்றும் அவ்விடம் நன்கு சுத்தப்படுத்தப்படும் என்றும் கூறப்பட்டது.