பயணிகளுக்கு ஆபாசப் படம் திரையிட்டதற்கு மன்னிப்புக் கோரிய விமான நிறுவனம்

  தமிழ் முரசு
பயணிகளுக்கு ஆபாசப் படம் திரையிட்டதற்கு மன்னிப்புக் கோரிய விமான நிறுவனம்

சிட்னி: ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரிலிருந்து ஜப்பானியத் தலைநகர் தோக்கியோவுக்குச் சென்ற குவாண்டாஸ் விமானத்தில் கடந்த வாரம் பயணம் செய்தவர்கள், தாங்கள் எதிர்பார்த்ததைவிட கூடுதல் கேளிக்கை அம்சத்தைப் பெற்றனர்.பாலியல் தொடர்பான பேச்சும் ஆபாசப் படங்களும் இடம்பெற்ற திரைப்படம் ஒன்று ஒவ்வொரு திரையிலும் ஒளிபரப்பப்பட்டது. கேளிக்கை வசதிகளை வழங்குவதில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால், விமானப் பயணத்தின்போது தங்களுக்கு விருப்பமான திரைப்படங்களை பயணிகளால் தேர்வுசெய்ய முடியவில்லை. இதனால், எல்லாரும் பார்க்க விமானப் பணியாளர்கள் ஒரே திரைப்படத்தைத் தேர்ந்தெடுத்தனர்.ஆனால், அவர்களின் தேர்வு பயணிகள் பலருக்கும் ஆச்சரியத்தைத் தந்தது. இதற்காக குவாண்டாஸ் விமான நிறுவனமும் மன்னிப்புக் கேட்டுக்கொண்டது. “விமானப் பயணத்தின்போது திரையிட இந்தத் திரைப்படம் நிச்சயம் பொருத்தமான ஒன்றில்லை. இதற்காக வாடிக்கையாளர்களிடம் நாங்கள் உளமார்ந்து மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறோம்,” என்றார் குவாண்டாஸ் பேச்சாளர் ஒருவர். “தவறு கண்டறியப்பட்டவுடன் எல்லா திரைகளிலும் குடும்பத்துக்கு உகந்த திரைப்படம் ஒன்றாக மாற்றப்பட்டது,” என்று சொன்ன அவர், முதலில் திரையிடப்பட்ட ஆபாசப் படம் எவ்வாறு தேர்வுசெய்யப்பட்டது என்பது குறித்து விசாரிக்கப்படுவதாகக் கூறினார்.

மூலக்கதை