உலகெங்கும் நாளை திரை காண இருக்கிறது ‘வேட்டையன்’
நாளை உலகெங்கும் திரைக்காண இருக்கிறது ரஜினிகாந்த் நடித்திருக்கும் ‘வேட்டையன்’ படம்.சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரமாண்டமாக வெளிவர இருக்கும் திரைப்படம் ‘வேட்டையன்’. ‘ஜெயிலர்’ படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பின் ரஜினி நாயகனாக நடித்து வெளியாகும் இப்படத்தின் மீது ரசிகர்கள் அதீத எதிர்பார்ப்பை வைத்துள்ளனர். படத்தில் ரஜினிகாந்துடன் அமிதாப் பச்சன், துஷாரா விஜயன், பகத் பாசில், ராணா, மஞ்சு வாரியர், ரித்திகா சிங் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். லைகா நிறுவனம் தயாரிப்பில் உருவாகி இருக்கும் ‘வேட்டையன்’ படத்தை டிஜே ஞானவேல் இயக்கியுள்ளார். மேலும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். கடந்த சில வாரங்களுக்கு முன்பே உலகெங்கும் ‘வேட்டையன்’ படம் முன்பதிவில் கலக்கிக்கொண்டு இருக்கிறது. இதுவரை உலகளவில் முதல் நாள் முன்பதிவு மட்டும் ரூ. 50 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இதனால் முதல் நாளே ‘வேட்டையன்’ படம் உலகளவில் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.ரூ. 160 முதல் ரூ.200 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள இப்படம் ஒட்டுமொத்தமாக ரூ. 400 கோடி வசூல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படம் ‘ஜெயிலர்’ வசூலையும் மிஞ்சுமா? என்று பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும் என்கின்றனர்.‘வேட்டையன்’ படத்தை இந்தியிலும் வெளியிடுகிறார்கள். அமிதாப் பச்சன் இந்தப் படத்தில் நடித்து இருக்கிறார். நாடு முழுவதும் பிரபலமான சூப்பர் ஸ்டார் ரஜினி இருக்கிறார். அதனால் ‘வேட்டையன்’ படம் இந்தியிலும் வசூல் வேட்டை நடத்தும் என நம்பப்படுகிறது.‘வேட்டையன்’ படத்தை இந்தியில் வினியோகம் செய்யும் உரிமையை வாங்கியிருப்பவர் பாலிவுட் நடிகரான ஹர்மான் பவேஜா. படம் பற்றி ஹர்மான் பவேஜா கூறுகையில், “ரஜினிகாந்தும் அமிதாப் பச்சனும் இணைந்து இந்தி படங்களில் நடித்திருக்கிறார்கள். இந்நிலையில் 33 ஆண்டுகள் கழித்து அவர்களை மீண்டும் பெரிய திரையில் சேர்ந்து பார்க்க பாலிவுட் ரசிகர்கள் ஆவலாக உள்ளார்கள்,” என்றார். படம் பற்றி இயக்குநர் ஞானவேல் கூறுகையில், “நட்சத்திர அந்தஸ்தை தாண்டி ரஜினியின் நடிப்புத் திறனை இந்தப் படத்தில் பயன்படுத்தியிருக்கிறேன். நடிப்பை கோரும் கதாபாத்திரம் என்பதால், ‘முள்ளும் மலரும்’ படத்தின் நிழலாக ரஜினியின் நடிப்பை இந்தப் படத்தில் நீங்கள் பார்க்கலாம்.ரஜினியின் திரைப்பயணத்தில் ‘முள்ளும் மலரும்’ படத்தின் காளி கதாபாத்திரம் மிகவும் முக்கியமான ஒன்று. அந்தப் படத்தில் வரும் ‘கெட்டப்பய’ என்ற வார்த்தையை பாடலில் எங்கேயாவது வைக்க வேண்டும் என்று அனிருத்திடம் கூறினேன். அப்படித்தான் ‘ஹன்டர் வந்துட்டார்’ பாடலில் ‘கெட்டப் பய சார்’ என்ற ஒரு வரியை சேர்த்திருக்கிறோம்.மேலும் சூர்யாவால் ‘வேட்டையன்’ படம் சாத்தியமானது. சூர்யாவுக்கு ‘வேட்டையன்’ படத்தின் கதை தெரியும். “நாம் எப்போது வேண்டுமானாலும் சேர்ந்து படம் பண்ணலாம். ரஜினியை வைத்து படம் செய்வது உங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு. தவறவிடாதீர்கள் என்று சூர்யா கூறினார். சூர்யா அனுமதிக்கவில்லை என்றால் வேட்டையனை இயக்கி இருக்க மாட்டேன். ஆயுத பூஜை, விஜய தசமி தொடர் விடுமுறையில் நல்ல லாபம் ஈட்டலாம் என திட்டமிட்டு பான் இந்தியா படமாக 10 மொழிகளில் எடுக்கப்பட்ட சூர்யாவின் கங்குவா திரைப்படம் அக்டோபர் 10ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் திடீரென சூப்பர் ஸ்டாரின் வேட்டையனும் அதே தேதியில் வெளியாகும் எனத் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்தது. வேறு வழியின்றி கங்குவா திரைப்படம் நவம்பர் 14ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. சூர்யாவும் மெய்யழகன் இசை வெளியீட்டு விழாவில் தமிழ் திரையுலகில் ரஜினிகாந்த் மூத்தவர் என்பதால் அவர் முதலில் வருவதே சரி கூறி வழிவிட்டார். அதனால் எலியும் பூனையுமாக அடித்துக்கொண்டு இருந்த சூர்யா, ரஜினி ரசிகர்கள் அடங்கிப் போனார்கள். கடந்த செப்டம்பர் 20 அன்று நடந்த ‘வேட்டையன்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த், இசையமைப்பாளர் அனிருத் குறித்து பேசிய காணொளி ஒன்றை சன் நெக்ஸ்ட் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.அதில், நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் டி.ஜே.ஞானவேலிடம் படத்திற்கு இசையமைக்க 100 விழுக்காடு அனிருத்தான் வேண்டும் எனக் கூறியதாகவும் அதற்கு இயக்குநர் தனக்கு 1,000 விழுக்காடு அனிருத்தான் வேண்டும் என்று தெரிவித்ததாகவும் கூறியுள்ளார். அந்தக் காணொளியைக் கேட்டு இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்ற அனிருத் வெக்கத்தில் முகத்தை மூடும் காட்சியும் அதில் இடம்பெற்றுள்ளது.அனிருத், “வேட்டையன் படத்தின் கதை மிகவும் வலுவானது. படம் வெளிவந்த பின் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்,” என்று கூறியுள்ளார். அதனால் படத்தின் மீதிருந்த எதிர்பார்ப்பும் ரசிகர்களிடம் அதிகமாகியுள்ளது.