காஷ்மீர்: ராணுவ வீரர்கள் இருவரைக் கடத்திச் சென்ற பயங்கரவாதிகள்
ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் ஆனந்த்நாக் பகுதியில் இந்திய ராணுவ வீரர்கள் இருவரைப் பயங்கரவாதிகள் கடத்திச் சென்றுவிட்டதாகத் தகவலறிந்த வட்டாரங்களைச் சுட்டி ‘ஏஎன்ஐ’ செய்தி வெளியிட்டுள்ளது.அம்மாவட்டத்திலுள்ள கஸ்வான் காட்டுப்பகுதியில் இந்தக் கடத்தல் சம்பவம் அரங்கேற்றப்பட்டதாகச் சந்தேகிக்கப்படுகிறது. கடத்தப்பட்ட எல்லையோர ராணுவத்தைச் சேர்ந்த அவ்விருவரில் ஒருவர், பயங்கரவாதிகளின் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தும் அவர்களின் பிடியிலிருந்து தப்பிவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் கூறப்பட்டது. இதனிடையே, கடத்தப்பட்ட இன்னொரு ராணுவ வீரரின் உடல் கண்டெடுக்கப்பட்டதாகவும் அவரது உடலில் துப்பாக்கிக்குண்டுக் காயங்கள் இருந்ததாகவும் காவல்துறை வட்டாரங்கள் கூறியதாக ‘இந்தியா டுடே’ ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. “உளவுத் தகவலை அடுத்து, செவ்வாய்க்கிழமையன்று (அக்டோபர் 8) கோக்கர்நாக்கின் கஸ்வான் காட்டுப்பகுதியில் இந்திய ராணுவம், ஜம்மு - காஷ்மீர் காவல்துறையுடனும் பிற அமைப்புகளுடனும் சேர்ந்து, பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையை மேற்கொண்டது. எல்லையோர ராணுவ வீரர் ஒருவர் காணாமல் போனதையடுத்து, இரவு முழுவதும் அவரைத் தேடும் பணிகள் இடம்பெற்றன,” என்று ஸ்ரீநகரைத் தளமாகக் கொண்ட இந்திய ராணுவத்தின் சினார் கோர் பிரிவு ‘எக்ஸ்’ ஊடகம் வழியாகத் தெரிவித்தது.