இசை நிகழ்ச்சியில் 34 கைப்பேசிகள் திருட்டு; வெளிமாநிலக் கும்பல் கைவரிசை என சந்தேகம்

  தமிழ் முரசு
இசை நிகழ்ச்சியில் 34 கைப்பேசிகள் திருட்டு; வெளிமாநிலக் கும்பல் கைவரிசை என சந்தேகம்

கொச்சி: நார்வே இசைக்கலைஞர் ஆலன் வாக்கர் பங்கேற்ற இசை நிகழ்ச்சியில் 34 கைப்பேசிகள் காணாமல் போயின.இந்தியாவின் கேரள மாநிலம், கொச்சி நகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 6) இரவு அந்த இசை நிகழ்ச்சி நடந்தது. அந்நிகழ்ச்சியில் கிட்டத்தட்ட 6,000 பேர் கலந்துகொண்ட நிலையில், 21 ஐபோன்கள், 13 ஆண்ட்ராய்ட் கைப்பேசிகள் என மொத்தம் 34 திறன்பேசிகள் திருட்டுப் போனதாகக் காவல்துறை தெரிவித்தது. இந்நிலையில், அது வெளிமாநிலக் கும்பலின் கைவரிசையாக இருக்கலாம் எனக் காவல்துறை சந்தேகிக்கிறது. ஏனெனில், திருட்டுப் போன கைப்பேசிகள் சில இப்போது மும்பையில் இருப்பது தொழில்நுட்ப உதவியுடன் கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து, அந்த இசை நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வெளிமாநிலங்களிலிருந்து வந்து கொச்சியில் தங்கியிருந்தவர்கள் யார் என்பதைக் கண்டறியும் பணியில் காவல்துறை ஈடுபட்டுள்ளது. அத்துடன், கண்காணிப்புப் படக்கருவிகளில் பதிவான காணொளிகளையும் காவல்துறை ஆராய்ந்து வருகிறது. “இதுவரையிலும் கைப்பேசித் திருடர்கள் குறித்து உறுதியான தகவல் எதுவும் கிடைக்கவில்லை. கைப்பேசிகளை இழந்தவர்களிடமிருந்து தகவல்களைத் திரட்டி வருகிறோம். இதன் பின்னணியில் ஒரு கும்பலே இருக்கலாம் எனச் சந்தேகிக்கிறோம்,” என்று முழவுக்காடு காவல்நிலைய அதிகாரி ஷியாம்குமார் தெரிவித்தார்.இப்படி ஒரே நிகழ்ச்சியில் ஏராளமானோர் கைப்பேசிகளைப் பறிகொடுப்பர் எனக் கற்பனை செய்ததுகூட இல்லை என்று, கைப்பேசியை இழந்த பெண் ஒருவர் கூறினார். “நிகழ்ச்சியின் இறுதியில் இலேசாகத் தூறியது. அதனால், கையிலிருந்த கைப்பேசியை என் ஆடைப்பையில் வைத்தது நினைவிலுள்ளது. வீடு திரும்பும் வழியில்தான் என் கைப்பேசி இல்லாததை உணர்ந்தேன்,” என்றார் அப்பெண்.

மூலக்கதை