மூன்று இரவுகளாக ‘லிஃப்ட்டில்’ சிக்கி தவித்த கன்னியாஸ்திரிகள்: கடவுள் போல் உதவிக்கு வந்த நபர்
அயர்லாந்து மற்றும் நியூசிலாந்து நாடுகளை சேர்ந்த 58 மற்றும் 68 வயதான இரண்டு கன்னியாஸ்திரிகள் இத்தாலி தலைநகரான ரோமில் தங்கியுள்ளனர்.
Via Aurelia என்ற பகுதியில் கன்னியாஸ்திரி வீடு ஒன்றில் தங்கிருந்த அவர்கள் கடந்த வெள்ளிக்கிழமை அந்த வீட்டின் மேல் தளத்திலிருந்து கீழே செல்வதற்காக ‘லிஃப்ட்டில்’ ஏறியுள்ளனர்.
சிறிது தூரம் இறங்கிய அந்த லிஃப்ட் திடீரென பழுதாகி அங்கேயே நின்றுள்ளது. லிஃப்ட் பாதியில் நின்றதால் அதிர்ச்சி அடைந்த இரண்டு பேரும் பலத்த சத்தம் எழுப்பி உதவிக்கு அழைத்துள்ளனர்.
ஆனால், அப்போது அந்த வீட்டில் யாரும் இல்லாததால் இவர்களின் அபாய குரலை யாரும் கேட்கவில்லை.இருண்டு போன லிஃப்ட்டில் சிக்கி தவித்த இருவரும் தண்ணீர் இல்லாமல் போராடியுள்ளனர்.
கடந்த திங்கள் காலை வேளையில், அதாவது இரண்டு நாட்கள் மற்றும் மூன்று இரவுகள் கழித்து, அந்த வீட்டை சுத்தப்படுத்தி பெறுக்க வந்த வீட்டுப்பணியாளர் ஒருவர் வீட்டின் வெளிப்புற கதவின் காலிங்க் பெல்லை அடித்துள்ளார்.
ஆனால், உள்ளே இருந்து யாரும் கதவை திறக்காததால் சந்தேகம் அடைந்த அவர் பொலிசாருக்கு தகவல் அனுப்பினார்.
வீட்டிற்கு வந்த பொலிசார் மாற்று சாவியின் உதவியுடன் கதவை திறந்து உள்ளே நுழைந்துள்ளனர்.
ஆனால், வீட்டில் உள்ள அறைகளில் யாரும் இல்லாததால், ‘யாராவது இருக்கிறீர்களா?’ என குரல் எழுப்பியுள்ளனர்.
இந்த குரலை கேட்ட இரண்டு கன்னியாஸ்திரிகளும் பலவீனமான குரலில் ‘ஆமாம், இங்கே லிஃப்ட்டில் சிக்கிக்கொண்டுள்ளோம்’ என பதிலளித்துள்ளனர்.
உடனடியாக தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் அளித்த பொலிசார், அவர்கள் வந்ததும் இருவரையும் பத்திரமாக வெளியே மீட்டனர்.
மூன்று இரவுகளாக தண்ணீர், உணவு எதுவும் இல்லாததால், சோர்ந்து போயிருந்த இருவரையும் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
தங்களது வாழ்வு முடிவதற்குள் தேவ தூதுவராக அந்த பணியாளர் வந்து தங்களை காப்பாற்றியதாக இரண்டு பேரும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.