சங்க இலக்கியத்தில் வணிக மேலாண்மை - இலக்கிய இன்பம்
திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்பது தமிழில் வழங்கும் ஒரு பழமொழி. பழமொழிகள் ஒவ்வொன்றும் பழமையான மொழிகள் மட்டுமன்று அவை ஒவ்வொன்றும் அனுபவ மொழிகள்.
வாழ்க்கை அனுபவங்களால் ஆனது. அனுபவங்கள் தான் வாழ்க்கையை அர்த்தப்படுத்துகின்றன. பொருள் நிறைந்ததாய் மாற்றுகின்றன.
பொருள் என்றவுடன் 'வாழ்வதற்குப் பொருள் வேண்டும், நாம் வாழ்வதிலும் பொருள் வேண்டும்' என்று படித்த வாசகம் ஒன்று நினைவுக்குளத்தில் நீச்சலடிக்கின்றது.
ஆம், வாழ்க்கை பொருளால் ஆனது. பொருள் நிறைந்தது. மனிதன் இனக்குழு சமூகமாக வாழ்ந்த போது தன்னிடமுள்ள பொருளைக் கொடுத்துவிட்டுத் தனக்குத் தேவையான பொருட்களைப் பெற்றுக்கொண்டான். இவற்றின் வளர்ச்சி பண்டமாற்று வணிகமாகப் பரிணமித்தது. அதுவே பின்னர் நாணயமுறை வணிகமாக வளர்ச்சியடைந்தது. அந்த வணிகத்தைச் செய்வதற்குத்தான் இங்கேயும், திரைகடலும் ஓடியிருக்கின்றனர்.
ஒரு நாட்டின் சிறந்த தொழில்களாக உழவுத் தொழிலையும் வணிகத் தொழிலையும் கூறலாம். நாடு செழிப்புடன் இருக்க வேண்டுமானால் இவ்விரண்டு தொழில்களும் செழிப்புற்று இருக்க வேண்டும். செழிப்புற்றிருந்த காரணத்தால் தான் சங்ககாலம் பொற்காலம் என்று சங்க இலக்கியங்கள் போற்றுகின்றன. இவற்றுள் நாட்டின் வளர்ச்சிக்குக் காரணமான வணிக மேலாண்மை குறித்த சிந்தனைகளை செவ்வியல் இலக்கியமான சங்க இலக்கியங்களில் வியப்பூட்டும் செய்திகளை அறியலாம்.
பண்டமாற்று வணிக முறை
சங்க காலத்தில் உள்ளூர் அளவில் நடைபெற்ற வணிகங்களில் பண்டமாற்றுமுறை வணிகமே பெரும்பான்மையாக நடைபெற்று வந்திருக்கின்றது. இதனை,
கான் உறை வாழ்க்கை கதநாய் வேட்டுவன்
மான்தசை சொரிந்த வட்டியும் ஆய் மகள்
தயிர் கொடு வந்த தசும்பும் நிறைய
ஏரின் வாழ்நர் பேரில் அரிவையர்
குளக்கீழ் விளைந்த களக்கொள் வெண்ணெல்
முகத்தனர் கொடுப்ப உகந்தனர் பெயரும்
என்கிற புறநானூற்று அடிகள் எடுத்துக்காட்டுகின்றன. இப்பாடலில் காட்டில் வாழும் வாழ்க்கையினை உடையவன் வேடன். சினம் மிகுந்த நாயுடன் அவன் வருவான். மான்கறியினை வட்டிலிலே கொண்டு வருவான்.
ஆயர் பாடியிலே இருக்கிற ஆயர் மகள் பானையிலே தயிரைக் கொண்டு வருவாள். அதற்குப் பதிலாக அவர்கள் நெல்லை முகந்து முகந்து அவ்வட்டிலும் பானையும் நிறையுமாறு கொடுப்பார்கள். அவர்களும் அது பெற்று மகிழ்ச்சியோடு செல்வார்கள் என்பதுதான் இந்தப்பாடலின் பொருள். இதன் மூலம் சங்க காலத்தில் இறைச்சியினையும் தயிரையும் கொடுத்து நெல்லினைப் பண்டமாற்றாகப் பெற்றிருப்பதை அறியலாம்.
அயல்நாட்டினருடன் வணிகத்தொடர்பு:
சங்க காலத்தில் வாழ்ந்த தமிழர்கள் அயல்நாட்டினரோடு கொண்டிருந்த தொடர்பை பட்டினப்பாலை என்னும் பத்துப்பாட்டு இலக்கியம் மிகத் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றது.
பல் ஆயமொடு பதிபழகி
வேறு வேறு உயர்ந்த முதுவாய்
ஒக்கல்
சாறு அயர் மூதூர் சென்று
தொக்காங்கு
மொழி பல பெருகிய பழிதீர்
தேயத்துப்
புலம்பெயர் மாக்கள் கலந்தினிது
உறையும்
முட்டாச் சிறப்பின் பட்டினம்.
என்னும் பாடல் வரிகளில் இதனை அறியலாம்.
அரிசி, இஞ்சி, தோகை முதலிய தமிழ்ச்சொற்கள் ஈப்ரு முதலிய மொழிகளில் இடம் பெற்றிருக்கின்றன. தமிழக வணிகர்கள் மிளகு வியாபாரத்தில் ஈட்டிய பெருஞ்செல்வத்தைப்பற்றியும், ரோமாபுரிக்கும் தமிழகத்திற்கும் உள்ள தொடர்பை பெரிபுளுசு, பிளினி போன்றோர் ஆய்வில் குறிப்பிட்டுள்ளனர்.
பிற நாட்டிலிருந்து பலமொழிகள் பேசக் கூடியவர்களும் தமிழகத்திற்கு வந்து இங்குள்ளவர்களிடம் ஒன்றாகக் கலந்து இனிதாக வாழும் நகரமாகக் காவிரிப்பூம்பட்டினம் விளங்கியிருக்கின்றது. பிறநாட்டிலிருந்து வந்து தமிழகத்தில் வாழ்ந்தவர்களைச் சங்க இலக்கியம் யவனர்கள் என்றும் மிலேச்சர் என்றும் குறிப்பிடுகின்றது. இதனை முல்லைப்பாட்டு என்கிற இலக்கியம் எடுத்துக்காட்டுகின்றது.
பட்டினப்பாலையில் வணிகமேலாண்மை:
தமிழர்கள் கடல்வழியாக மரக்கலங்களைப் பயன்படுத்தி பிற நாட்டினரோடு வணிகத்தில் ஈடுபட்டனர். கடலுக்கும் சங்க காலத்தமிழருக்குமான உறவு நெருக்கமானது. அதனால்தான் கடல் குறித்தும் மரக்கலம் குறித்தும் பல சொற்கள் வழங்கி வந்திருக்கின்றன.
கடலைக்குறிப்பிடுவதற்கு பரவை, ஆழி, புணரி, ஆர்கலி, முந்நீர் என்பன போன்ற சொற்களும்; ஓடம், கலம், மரக்கலம், தோணி, மிதவை, கப்பல், நாவாய், மரம், திமில், அம்பி முதலிய மரக்கலத்தைப் பற்றிய சொற்களும் சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றன. நாட்டின் கரையோரங்களுக்குச் செல்வதற்கு ஓடங்களையும் அயல் நாட்டின் வணிகத்திற்கு நாவாய்களையும் பயன்படுத்தி உள்ளனர்.
வெளியிலிருந்து நகருக்குள் வரும் பொருள்களுக்கு வரி வாங்கும் வழக்கம் இருந்துள்ளது. 'உல்கு' என்பது 'வரி'. அதனையே பின்னாளில் 'சுங்கம்' என வழங்கினர். அரசனுடைய ஆட்களே நடுநிலையிலிருந்து சுங்கம் வாங்குவார்கள். யாரும் அவர்களை ஏமாற்றிவிடமுடியாது. இந்தச் செயலை-
மாகாவிரி மணம் கூட்டும்
தூஊ எக்காத் துயில் மடிந்து
வால் இணர் மடல் தாழை
நல்லிறைவன் பொருள் காக்கும்
தொல்லிசைத் தொழில் மாக்கள்
காய் சிதைத்த கதிர்ச் செல்வன்
தேர் பூண்ட மாசு போல
வைல் தோறும் அசைவின்றி
என்ற பட்டினப்பாலையின் பாடல் வரிகள் குறிப்பிடுகின்றன.
சுங்கம் வசூலிப்பதில் அவர்கள் எப்படி உண்மையாக நடந்து கொண்டார்கள் என்பதை இப்பாடலின் பொருள் விளக்குகின்றது.
சுங்கம் வாங்குவோர் நள்ளிரவிலே காவிரியாற்று வெள்ளம் சூழ்ந்த மணல் மேட்டிலே உறங்குவார்கள். அவர்கள் உறங்கும் போது கூட தங்கள் கடமையில் கண்ணும் கருத்துமாயிருப்பர்.
அரசனுடைய பண்டசாலைத்தெருவில் குவிந்திருக்கும் அப்பண்டங்களை பிறர் கவராமல் பாதுகாப்பதிலே அவர்கள் வல்லவர்கள். அவர்கள் கதிரவன் தேரிற்பூட்டிய குதிரைகள் போல அயராது சுற்றி வருவார்கள். சளைக்காமல் வாங்க வேண்டிய சுங்கங்களை வாங்கிக்கொண்டே இருப்பார்கள் என்கிறார் புலவர்.
பண்டகசாலையின் சிறப்பைக் கூறிய புலவர் பண்டங்கள் எப்படிக்குவிகின்றன என்பதைப்பற்றியும் கூறுகிறார்.
அந்நிய நாடுகளிலிருந்து பல பண்டங்கள் கப்பல் வழியாக வந்து காவிரிப்பூம்பட்டினத்திலே இறக்குமதி செய்யப்படுகின்றன. பல பண்டங்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. வெளியே அனுப்புவதற்காகக் குவிந்து கிடக்கும் பண்ட மூட்டைகளின் மேல் சோழனுடைய புலி முத்திரையிடப்பட்டுக் கிடக்கின்றன. புலி முத்திரையிடப்பட்ட பண்டங்கள் தான் வெளியே போக முடியும். இது அவர்களின் வணிக மேலாண்மையைக் காட்டுகின்றது.
வணிகம் செய்யும் கடைத்தெருவுக்கு 'ஆவணம்' என்பது ஒரு பெயர், 'அங்காடி' என்பது மற்றொரு பெயர். 'பண்டசாலை' என்பது பண்டங்களைப்பத்திரமாகச் சேமித்து வைத்திருக்கும் இடம். இப்பொழுது 'கிடங்கு' என்கிறோம். 'ஆவணம்' அல்லது 'அங்காடி' என்பது பண்டங்களை வைத்துச் சில்லறை வணிகம் செய்யும் இடம்.
காவிரிப்பூம்பட்டினத்து கடைத்தெருவில் பெரிய பெரிய வணிகர்கள் இருந்தனர். அவர்கள் மாடியிலேயே அதாவது மேல் வீட்டிலேயே குடியிருந்தனர். வணிகத்தில் கால மேலாண்மையையும், ஈடுபாட்டையும் இது காட்டுகின்றது.
வணிக நகரம்:
காவிரிப்பூம்பட்டினத்துத் தெருக்களிலே பல செல்வங்கள் குவிந்து கிடக்கின்றன. சூரியனின் சூடான கதிர்கள் நுழைய முடியாதபடி நிழல்தந்து கொண்டிருக்கும் வளமும் செழுமையும் நிறைந்த பூம்புகார் நகரம் என்றும் புகழ் மணம் மாறாதது. தேவர் களால் காக்கப்பட்டு வருவதாலே இங்கே வேற்று நாடுகளிலிருந்து கடல் வழியாகக் கொண்டுவரப்பட்ட குதிரைகளும், வண்டிகளில் ஏற்றிப் பக்கத்து ஊர்களில் இருந்து வந்த கரு மிளகு மூட்டைகளும், வடக்கே உள்ள மேரு மலையில் விளைந்த சந்தனமும், அகிலும், தெற்குக் கடலில் தோன்றிய முத்தும், கீழ்க்கடலில் வளர்ந்த பவளமும், கங்கைக் கரையில் இருந்து வந்த பொருட்களும், காவிரிக்கரை வளம் வழங்கிய பொருட்களும், கடாரத்தில் இருந்து வந்த நுகர் பொருட்களும் மற்றும் சீனம், யவனம் முதலிய பல நாடுகளில் இருந்து வந்த பல வகை வண்ணங்களும், இலங்கைத்தீவிலே உண்டான உணவுப்பொருள்களும் ஏராளமாக குவிந்து கிடக்கின்றன.
'காழகத்தீவு' என்று பெயர் பெற்ற பர்மாவிலிருந்து பல செல்வப் பொருட்கள் குவிந்து கிடக்கின்றன. இத்தகைய பல செல்வங் களுடன் சிறந்து விளங்கிய வணிக நகரம் தான் காவிரிப்பூம்பட்டினம்.
இதனைத்தான்,
செல்கதில் நுழையாச் செழுநகர் வரைப்பின்
செல்லா நல்லிசை அமரர் காப்பின்
நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும்
காலின் வந்த கருங்கறி மூடையும்
வடமலைப் பிறந்த மணியும் பொன்னும்
குடமலைப் பிறந்த ஆரமும் அகிலும்
தென்கடல் முத்தும் குணகடல் துகிரும்
கங்கை வாரியும் காவிரிப் பயனும்
ஈழத்து உணவும் காழகத்து ஆக்கமும்
அரியவும் பெரியவும் நெரிய ஈண்டு
வளந்தலை மயங்கிய நனந்தலை மறுகின்
என்கிற பாடல் வரிகள் எடுத்துக்காட்டுகின்றன.
வணிகர்களின் சிறப்பு:
வணிகம் சிறந்த புகார் நகரத்திலே சிறந்த வணிகர்கள் பலர் வாழ்ந்திருந்தனர். அவர்களின் சிறப்பினை-
நெடு நுகத்துப் பகல் போல
நடுவு நின்ற நன்னெஞ்சினோர்
வடுவஞ்சி வாய்மொழிந்து
தமவும் பிறவும் ஒப்ப நாடி
கொள்வதூஉம் மிகை கொளாது
பல் பண்டம் பகர்ந்து வீசும்
தொல் கொண்டித் துவன்று இருக்கை
என்று கருத்தாழமிக்க வரிகளில் பாடியிருக்கிறார் கடியலூர் உருத்திரங்கண்ணனார்.
வணிகர்கள், நீண்ட நுகத்தடியில் தைத்திருக்கும் நடு ஆணி போல் நடுவு நிலைமையோடு வாழும் நல் நெஞ்சத்தை உடையவர்கள். பழிக்கு அஞ்சி உண்மையே பேசுவார்கள்.
தம்முடைய பொருளையும், பிறருடைய பொருளையும் ஒரு தன்மையாகவே எண்ணுபவர்கள். பொருளை வாங்குவோரிடம் அளவுக்கு மேல் அதிகமாக வாங்கமாட்டார்கள்.
தாங்கள் கொடுக்கும் பண்டத்தையும் குறைத்துக் கொடுக்காமல் வணிகம் செய்பவர்கள் என பட்டினப்பாலை கூறுவதிலிருந்து அக்கால வணிகர்களின் வணிக மேலாண்மையை அறிய முடிகின்றது.
புலவர்களும் வணிகமும்
சங்ககாலப் புலவர்களில் சிலர் வணிகத்தைத் தொழிலாகக் கொண்டிருந்தனர் என்பதை அவர்களின் பெயர்களைக் கொண்டு அறியமுடிகிறது.
சான்றாகக் கூல வணிகன் சீத்தலைச் சாத்தனார் என்ற பெயரின் மூலம் தானிய வகைகளின் வாணிபத்தையும், அறுவை வணிகன் இளவேட்டனார் என்னும் பெயரின் வாயிலாக ஆடை வாணிகத்தையும், மதுரை பண்ட வாணிகன் இளநத்தனார் என்ற பெயரிலிருந்து பலசரக்கு வாணிகத்தையும், மதுரைப்பெருங்கொல்லனார், உறையூர் இளம்பொன் வாணிகன் சாத்தங்கொற்றனார் முதலிய பெயர் களின் வழி அவர்கள் செய்த வாணிகத்தையும் அவர்களில் சிலர் பெரும் புலவர்களாகவும் இருந்தனர் என்பதையும் அறியமுடிகிறது.
நாளங்காடி, அல்லங்காடி
சங்க காலத்தில் உள்நாட்டு வணிகமும், அயல்நாட்டு வணிகமும் சிறப்புற்று விளங்கின. கடற்கரை நகரங்கள் பட்டினங்கள் என்று அழைக்கப்பட்டன. மருவூர் பாக்கம், பட்டினப்பாக்கம் என இரண்டு பிரிவாக அவை விளங்கின.
இப்பாக்கங்களில் நாளங்காடி, அல்லங்காடி என அங்காடிகள் பெயரிட்டு அழைக்கப்பட்டன.
'நாளங்காடி' என்பது பகலில் வணிகம் செய்த கடைகளுக்கும், 'அல்லங்காடி' இரவில் வணிகம் செய்த கடைகளுக்கும் வழங்கிய பெயர்களாகும்.
சங்க காலத்தில் நடைபெற்ற வணிகங்களில் உப்பு வணிகமும் ஒன்று. இவ்வணிகத்தைச் செய்தவர்கள் 'உமணர்கள்' என அழைக்கப்பட்டனர்.
பண்டமாற்று முறை வணிகத்திற்கு இன்றளவும் சான்றாகத் திகழ்வது உப்பு வணிகமாகும்.
உப்பெய் சாகாட்டு உமணர் காட்ட
கழி முரி குன்றத்து அற்றே
என்றே புறநானூற்றுப்பாடல் எருது பூட்டிய கட்டை வண்டிகளில் உப்பினை கொண்டு செல்லும் முறையினையும் உப்பளங்களில், குன்றைப் போல் உப்பு குவித்து வைத்திருந்ததையும், அவ்உப்பினை விலை கூறி விற்றுவரும் உமணரின் ஆரவாரம் ஊரெல்லாம் நிறைந்திருக்கும் என்கிற செய்தியினையும் இப் பாடலில் அறிய முடிகின்றது.
- இன்பம் தொடரும்...