மலேசியா விமானம் சுடப்பட்ட விவகாரம்.. நீதியை நிலைநாட்ட எதையும் செய்ய தயார்: அவுஸ்திரேலிய பிரதமர் உறுதி (வீடியோ இணைப்பு)
நெதர்லாந்து தலைநகர் ஆர்ம்ஸ்டர்டாமிலிருந்து மலேசியத் தலைநகர் கோலாலம்பூருக்கு, கடந்த 2014ம் ஆண்டு ஜூலை 17ம் தேதி, 298 பேருடன் பயணித்த மலேசியன் ஏர்லைன்ஸின் MH17 விமானம், கிழக்கு உக்ரைன் பகுதியில் விழுந்து நொறுங்கியது.
இதில் விமானத்தில் பயணம் செய்த 298 பேரும் பலியாயினர். இவ்விமானத்தை உக்ரைன் போர் விமானம் சுட்டு வீழ்த்தியதாக ரஷ்யா தொடர்ந்து கூறி வந்தத.
இந்நிலையில் இதுகுறித்து விசாரணை செய்து வந்த சர்வதேச குழு, ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட ‛ ‘Buk’ ரக ஏவுகணை மூலம் விமானம் தாக்கப்பட்டதாக அறிவித்தது.
ஒலியை விட 3 மடங்கு அதிவேகத்தில் பறக்கும் அந்த ஏவுகணையானது ரேடர் மூலம் வெடிக்க கூடியது. மேலும், தாக்கவேண்டிய இலக்கின் தூரத்திற்கு மிக அருகில் வந்தவுடன் அது தானாகவே வெடிக்க கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.
விமானத்தின் முகப்பு பகுதிக்கு அருகில் ஏவுகணை கடந்தபோது, ஏவுகனையில் இருந்த ரேடர் இலக்கை அடைந்துவிட்டதாக கருதி தானாக வெடித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் டர்ன்புல் பாராளுமன்றத்தில் கூறியதாவது, விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது குறித்து விசாரிக்க, சர்வதேச விசாரணை குழு அமைக்க ஐ.நா., முயற்சித்தது அப்போது, தனது அதிகாரத்தை பயன்படுத்தி ரஷ்யா தடுத்தது.
இது கண்டனத்திற்குரியது. விமானத்திலிருந்த 298 பேரை படுகொலை செய்தது மன்னிக்க முடியாத குற்றமாகும்.
இதற்கு காரணமானவர்களை சட்டத்தின் பிடியில் நிறுத்த தேவையான எந்த முயற்சிகளையும் ஆஸ்திரேலியா மேற்கொள்ளும்.
தவறு செய்தவர்கள் கண்டிப்பாக தப்பிக்க முடியாது என்று அவர் கூறியுள்ளார்.