வேட்டைக்கு சென்றபோது காணாமல் போன நபர்: எறும்புகளை தின்று உயிர் பிழைத்த அதிசயம்
அவுஸ்ரேலியாவின் மேற்கு பகுதியில் வறண்ட பாலைவனம் ஒன்று அமைந்துள்ளது.
இந்த பகுதியில், ரெக் போக்கர்டி(63) என்ற நபர் ஒரு வாரத்திற்கு முன்னர் ஒட்டகம் ஒன்றை கண்டுபிடித்து அதனை வேட்டையாடுவதற்காக பின் தொடர்ந்து சென்றுள்ளார்.
ஆனால், சுமார் 15 கிலோ மீற்றர் தூரம் சென்ற அவர் தான் பாதை மாறி வந்துள்ளதை உணர்ந்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.
ஏற்கனவே கடும் சோர்வில் இருந்த அவர் வழிமாறியதால் வீட்டிற்கு திரும்பி செல்ல முடியாமல் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
எனினும், தன்னுடைய உயிர் வாழும் முயற்சியை கைவிடாத அவர் அங்குள்ள மரத்திற்கு கீழ் அமர்ந்து உடலின் சக்தியை விரயம் செய்யாமல் மீட்பு குழுவினருக்காக காத்திருந்துள்ளார்.
இவ்வாறு 6 இரவுகள் கழித்த அவர் மிகவும் சோர்வுற்று மயக்க நிலைக்கு செல்லும் நிலையை அடைந்தபோது, இன்று காலை மீட்புக்குழுவினர் வந்து அவரை பத்திரமாக மீட்டுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து பேசிய பொலிஸ் அதிகாரியான, ஆண்டி கிரேட்வுட், நாங்கள் அவரை மீட்கும்போது குடிக்க தண்ணீர் கூட இல்லாமல் கடுமையான உடல் சோர்வில் இருந்துள்ளார்.
எனினும், பாலைவனத்தில் தொலைந்துபோனால் உயிர் பிழைப்பது எப்படி என்ற நுணுக்கங்களை அவர் நன்றாக அறிந்துள்ளார்.
கடைசி இரண்டு நாட்களில் சாப்பிட எதுவும் கிடைக்காததால், பாலைவனத்தில் காணப்படும் கருப்பு எறும்புகளை மட்டும் தின்று உயிர் பிழைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
தனது சகோதரன் திரும்பி வந்த உற்சாகத்தில் பேசிய ரெக்கின் சகோதரி, நேற்று இரவு எனக்குள் ஒரு வினோதமான உணர்வு ஏற்பட்டது. இரவு கழிந்ததும் அதிகாலையில் தனது சகோதரனை நிச்சயமாக மீட்டு விடுவோம் என்ற நம்பிக்கை எழுந்தது என மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.