டென்மார்க்கின் முதல் பெண் பிரதமராக ஷ்மிட் தெரிவு
அவரின் இடதுசாரி கூட்டணி தற்போதைய பிரதமர் லார்ஸ் ரோக்கே ராஸ்முசனின் கூட்டணியைத் தோற்கடித்துள்ளது. டென்மார்க்கில் நேற்று தேர்தல் நடந்தது.
இதில் ஹெல்லி தார்னிங் ஷ்மிட்டின்(46) டென்மார்க் சமூக ஜனநாயகக் கட்சி வெற்றி பெற்றது. 4 கட்சிகள் கொண்ட இந்த இடதுசாரி கூட்டணி டென்மார்க் நாடாளுமன்றத்தில் உள்ள 179 இடங்களில் 89 இடங்களை கைப்பற்றியது. 10 ஆண்டுகளுக்குப் பிறகு இடதுசாரிகள் வெற்றி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நாங்கள் தவறு செய்யமாட்டோம். இன்று புதிய சரித்திரத்தை எழுதியுள்ளோம் என்று ஷ்மிட் தெரிவித்தார்.
திருமதி. ஷ்மிட் கடந்த 1966-ம் ஆண்டு பிறந்தார். கோபன்ஹேகன் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் பயின்றார். பின்னர் புரூகஸில் உள்ள யூரோப்பியன் கல்லூரியில் படித்தார். டானிஷ் தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பின் ஆலோசகராக பணி புரிந்துள்ளார்.
கடந்த 2005ம் ஆண்டு சமூக ஜனநாயகக் கட்சி தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 2007ம் ஆண்டு நடந்த தேர்தலில் ஷ்மிட் கட்சி படுதோல்வி அடைந்தது.
தினசரி வேலை நேரத்தில் 12 நிமிடங்கள் அதிகரிக்க அவர் முடிவு செய்துள்ளார். இதனால் உற்பத்தி பெருகும் என்றும், அது நாட்டின் வளர்ச்சிக்கு உதவும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஆனால் இதை தற்போதைய பிரதமர் ராஸ்முசன் உள்ளிட்ட அரசியல் விமர்சகர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.