எங்கும் பார்த்தாலும் "சொர்க்க வீதி": மறக்க முடியாத அனுபவத்தை தரும் குயின்ஸ்லாந்து (வீடியோ இணைப்பு)
இது நிலப்பரப்பில் அங்கு உள்ள மாநிலங்களில் இரண்டாவது இடத்திலும் மக்கள் தொகையில் மூன்றாவது இடத்திலும் உள்ளது.
டாக்ளஸ் துறைமுகம், தங்க கடற்கரை(Gold coast), மோஸ்மேன் ஆறு, ஸ்கேர்போரஃப் துறைமுகம், டைன் மரங்களின் சதுப்பு நிலக்காடுகள், நூசா முதன்மை கடற்கரை, பளிங்குவீடு மலைகள்(glass house mountains) என பார்க்க வேண்டிய பரவசமான பகுதிகள் பல உள்ளன.
குயின்ஸ்லாந்திற்கு மேற்கே அவுஸ்திரேலியாவின் வடக்கு பிரதேசமும், தென்மேற்கே தெற்கு அவுஸ்திரேலியாவும், தெற்கே நியூ சவுத்வேலஸும், கிழக்கில் பசிபிக் பெருங்கடல் மற்றும் பவள கடலும் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன.
அவுஸ்திரேலியாவின் அனைத்து மாநிலங்களிலும் கடற்கரையை ஒட்டியே பெரிய நகரங்கள் உள்ளன. குயின்ஸ்லாந்தில் தென் கிழக்கு பகுதியில் மக்கள் நெருக்கம் அதிகம்.
உலகில் பெரிய மாநிலங்களில் 6 வது இடத்தில் உள்ள குயின்ஸ்லாந்தின் பெரிய நகரமும் தலைநகரமும் பிரிஸ்பேன் தான்.
எழும் சூரியனின் பேரொளியை, பெருங்கடலை கடந்து எதிர்கொள்ளும் முதல் நிலப்பகுதியாக இருப்பதால், பிரிஸ்பேன் ‘சூரிய ஒளி நகரம்’ என்றே அழைக்கப்படுகிறது.
அவுஸ்திரேலியாவின் 30 முக்கிய நகரங்களில் 10 நகரங்களை தன்னகத்தே குயின்ஸ்லாந்து கொண்டுள்ளது. அதனால் இங்கு காண்பதெல்லாம் சொர்க்கவீதி கோலம்தான்.
பிரித்தானிய ராணிக்கு பெருமை சேர்ப்பதாக இதற்கு இப்பெயர் வைக்கப்பட்டது. 1859 ம் ஆண்டு யூன் 6 ம் திகதி நியூசவுத்வேலஸிலிருந்து பிரிந்து தனி மாநிலமான யூன் 6 ம் திகதியை குயின்ஸ்லாந்து தினமாக அங்குள்ள மக்கள் ஆண்டுதோறும் கொண்டாடுகின்றனர்.
சுற்றுலா தலங்களுக்கு இங்கு குறைவில்லை என்று சொல்வதைவிட , குயின்ஸ்லாந்தே சுற்றுலாதலங்களின் ஒரு தளம் என்று சொல்வதுதான் சரி.
அவுஸ்திரேலியாவின் பிற மநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் குயின்ஸ்லாந்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகம்.
ஆண்டுதோறும் மில்லியன் கணக்கில் மக்கள் குவிகின்றனர். 4 பில்லியன் டொலர் வருமானம் இங்குள்ள சுற்றுலாதுறையால் ஆண்டுதோறும் ஈட்டப்படுகிறது.
சுற்ற வேண்டிய தலங்கள்
டாக்ளஸ் கடற்கரை
அவுஸ்திரேலியாவின் 100 முக்கிய நகரங்களில் 3வது இடத்தில் டாக்ளஸ் உள்ளது. இது குயின்ஸ்லாந்தின் வடக்கில் கைர்ன் நகருக்கு 70 கி.மீ. தூரத்தில் உள்ளது. டாக்ளஸ் கடற்கரையின் சிறப்பு 4 கி.மீ.நீளத்துக்கு ஒரு பிறை போல அமைந்துள்ள கவர்ச்சிதான்.
நீலக்கடல், அதன் அலைகள் கரையாடும் வெண்மணல்வெளி. அதையடுத்து, அழகிய சோலைசெறிந்த பசுமை பார்வையாளர்களை பரவசப்படுத்துகிறது.
இந்த ஊருக்கு தீவுப்புள்ளி, டெர்ரிகல், போர்ட் ஓவன், சாலிஸ்பரி என முந்தைய பெயர்கள் பல உண்டு. இந்த இயற்கை எழிலில் 3205 பேர் மட்டுமே 2011 வரை குடியிருந்தனர் என்பது வியப்பு.
இங்கு மே மாதத்திலிருந்து செப்டம்பர் வரை சுற்றுலா சூழல் காலம். சுரங்க தொழிற்சாலையும் டைன் மரங்கள் வெட்டுதலும் இங்கு வளர்ச்சிக்கான முக்கிய தொழில்கள்.
உலக பாரம்பரியமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட பவளப்பாறை கடற்பகுதி, மற்றும் டைன் மர மழைக்காடுகளுக்கு அருகில் இந்த ஊர் உள்ளது இன்னும் சிறப்பு.
தங்க கடற்கரை
இந்த நகரம் குயின்ஸ்லாந்தின் இரண்டாவது பெரிய நகரம். அவுஸ்திரேலியா ஒரு தீவு என்பதால் வடகிழக்கில் 7,000 கி.மீ. தூரத்துக்கு நெடிய கடற்கரை கொண்டது.
சில இடங்களில் கவர்ச்சிகரமாக அமைந்த கடற்கரைகளில் தங்க கடற்கரையும் ஒன்று.
உலாவுவதற்கு அழகிய பீச், கால்வாய்கள், நீர்வழி அமைப்புகள், உயர்ந்த ஆதிக்கமான வானிலை அமைப்பு, சதுப்பு நில மழைக்காடுகள், மிதமான வெப்ப மண்டலம், தீம் பார்க், இரவு நகரம் என எத்தனையோ சிறப்புகள் சுற்றுலாப் பயனிகளை ஈர்க்க காரணமாய் இங்கு உள்ளன.
வெண்பகல் தீவுகள்
இங்கு ஒரு வித்தியாசமான பகல் ஒளி பளபளப்பு வெண்மணலோடு மின்னுகிறது. இதுவே இப்பெயர் ஏற்பட காரணம்.
74 வெண்பகல் தீவுகள் ஆஸ்திரேலியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ளன. இதில் பல தீவுகள் குயின்ஸ்லாந்தில் அமைந்துள்ளன. அதில் பல அடர்ந்த காடுகளாக இருப்பதால் மனித நடமாட்ட வழக்கமில்லாமல் உள்ளது. ஆனாலும், படகுகளில் பயணித்து ரசித்துவிட்டு வரும் வசதிகள் உண்டு. நாமே கேப்டனாக ரசிக்கும் படகோட்டம் இங்கு பிரபலம். ஒரு த்ரில்லான அனுபவம் நிச்சயமாகும்.
பாரம்பரிய பவளப்பாறை
2,300 கி.மீ. தூரத்துக்கு பவளப்பாறைகளும், கடல்வாழ் உயிர்களும் கடலில் படகில் மிதந்து ரசிப்பது அருமை.
புர்லீஃப் ஹெட்
இந்த பீச்சில் உலாவுவது, படகில் மிதப்பது, சந்தை, பூங்கா என பல சுவாரஸ்யங்களைக் கொண்டது.
கனவு உலகம்(Dream world)
வியப்பான பல விளையாட்டுகள், அழகியல் அமைப்புகள் அடங்கிய பெரிய பூங்காவும், விதவிதமான வனவிலங்குகளின் உயிரியல் பூங்காவும் சிறப்பு.
ஹேய்மேன் தீவு, பிரேசெர் தீவு, ஹமில்டன் தீவு, வெண்சொர்க்க பீச் என பார்க்க வேண்டிய இடங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.
சுற்றுலாவுக்கு குயின்ஸ்லாந்தை நாம் தேர்ந்தெடுப்பதை விட, செல்லும் வாய்ப்பு கிடைத்தாலே வாழ்க்கையின் கொடுப்பினை என்று சொல்லலாம். புறப்படுங்கள் பிறவிப்பயனை அடையுங்கள்.
மருசரவணன்.