திருமண புகைப்படங்களை தொலைத்த 89 வயது முதியவர்: பத்திரமாக மீட்டுத் தந்த இளம்பெண்

  NEWSONEWS
திருமண புகைப்படங்களை தொலைத்த 89 வயது முதியவர்: பத்திரமாக மீட்டுத் தந்த இளம்பெண்

அவுஸ்திரேலியாவின் பெர்த் பகுதியில் குடியிருந்து வந்த 89 வயதான Lloyd Jones, ஓய்வு இல்லத்தில் குடியேற முடிவு செய்திருந்தார்.

இதனையடுத்து அவரது வீட்டில் இருந்த குறிப்பிட்ட சில பொருட்களை தொண்டு நிறுவனம் ஒன்றிற்கு வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால் அந்த பொருட்களில் 1949 ஆண்டு நடைபெற்ற அவரது திருமண புகைப்பட தொகுப்பும் இருப்பதை அவர் அறிந்திருக்கவில்லை.

இந்நிலையில் பெர்த் பகுதியில் குடியேறிய பிரித்தானிய இளம்பெண் Holly Edwards, அப்பகுதியில் உள்ள பயன்படுத்திய பொருட்களை விற்பனை செய்யும் கடையில் பணிக்கு சேர்ந்துள்ளார்.

அப்போது அங்கிருந்த திருமண புகைப்பட தொகுப்பை பார்க்க நேர்ந்த அவர் அதன் முக்கியத்துவம் உணர்ந்து தமது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சில புகைப்படங்களையும் இணைத்து பதிவேற்றிய இந்த பதிவு பின்னர் வைரலாக மாறி 56,000 பேர் பகிரும் அளவுக்கு உயர்ந்துள்ளது.

இதனிடையே, தமது திருமண புகைப்படங்களை கொண்ட தொகுப்பு தொலைந்தது அறிந்து அந்த முதியவர் வருத்தத்தில் இருந்துள்ளார்.

அப்போது அந்த முதியவரின் உறவினர் ஒருவர் இந்த பேஸ்புக் பதிவை காண நேரிட்டதும், அதை அந்த முதியவரிடம் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து அந்த முதியவர் குடும்பம் Holly Edwards என்பவரை தொடர்பு கொண்டு நடந்த சம்பவத்தை தெரிவித்துள்ளனர்.

நிரந்தரமாக தொலைந்தது என கருதப்பட்ட அந்த புகைப்படங்களை திருப்பி அளித்த அந்த இளம்பெண்ணிற்கு நன்றி தெரிவித்த அந்த முதியவர், அவரை நேரில் சந்தித்து தமது திருமணம் குறித்த சுவாரசியங்களையும் பகிர்ந்து கொண்டுள்ளார்.

மூலக்கதை